வைரலாகும் அண்டார்டிகா பென்குயினின் உருக்கமான காணொளி...!
அண்டார்டிகாவில் தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து மரணத்தை நோக்கிப் பயணிக்கும் பென்குயினின் காணொளி ஒன்று பல வருடங்களுக்குப் பிறகு தற்போது வைரலாகி வருகின்றது.
இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் இயக்கிய Encounters at the End of the World என்ற ஆவணப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியே சர்வதேச அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த ஆவணப்படத்தில் அடேலி வகை பென்குயின் ஒன்று விசித்திரமாகச் செயல்படுவது பதிவாகியுள்ளது.
பென்குயின்கள்
பொதுவாகப் பென்குயின்கள் உணவுக்காகவும் உயிர் பிழைக்கவும் கூட்டமாகச் சேர்ந்து கடலை நோக்கிச் செல்லும்.
ஆனால், இந்தப் பென்குயின் மட்டும் திடீரெனத் தனது கூட்டத்தைப் பிரிந்து, எவ்வித வாழ்வாதாரமும் இல்லாத அண்டார்டிகாவின் உட்பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கியது.

இது குறித்து விளக்கியுள்ள ஹெர்சாக், அந்தப் பென்குயினைத் தடுத்து மீண்டும் கூட்டத்தில் கொண்டு வந்து விட்டாலும் அது தனது முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை எனவும் மீண்டும் அதே பனி மலைகளை நோக்கித்தான் நடக்கத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உணவோ நீரோ கிடைக்காத அந்தப் பனிப் பாலைவனத்தில் பென்குயின் செல்வது தற்கொலைக்குச் சமமான ஒரு முடிவாகும் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அர்த்தமற்ற தன்மை
இந்தநிலையில், தற்போது நிஹிலிஸ்ட் பென்குயின் (Nihilist Penguin) என்ற பெயரில் பகிரப்பட்டு வரும் இக்காணொளி, நவீன கால மனிதர்களின் மனநிலை மற்றும் நிஹிலிசம் (Nihilism) என்ற தத்துவத்தோடு ஒப்பிடப்படுகின்றது.
வாழ்க்கையின் அர்த்தமற்ற தன்மையை உணர்ந்து தனிமையைத் தேர்ந்தெடுக்கும் ஒரு உயிரினத்தின் குறியீடு எனச் சமூக வலைதளங்களில் இது விவரிக்கப்படுகின்றது.
The way Nihilist Penguin looked back before leaving everyone make this video more heartbreaking pic.twitter.com/eo4A7skbwo
— Bruce (@_Bruce__007) January 24, 2026
17 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இக்காட்சி, இன்றும் மனித உணர்வுகளுக்கு நெருக்கமாக இருப்பதாலேயே மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
மேலும், இப்பயணத்தைத் தொடர்ந்த சில நாட்களிலேயே கடும் குளிர் மற்றும் பசியால் அந்தப் பென்குயின் உயிரிழந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |