“அரசாங்கத்திற்கு ஆதரவு” ரிசாட் தரப்பு எடுத்துள்ள தீர்மானம்
சிறிலங்கா அரசாங்கத்தின் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
புத்தளம், கற்பிட்டி பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ரிசாட் பதியுதீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கட்சியின் உயர்பீடம் கூடி முடிவெடுத்திருந்ததாக ரிசாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தீர்மானம் கட்சியின் தான் உட்பட ஏனைய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், எமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன், அலிசப்ரி ரஹீம் ஆகிய மூவரும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கட்சியின் உயர்பீடம் எடுத்த தீர்மானங்களையும், யாப்பையும் மீறி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாகளித்தமையால் குறித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அதுதொடர்பில் விளக்கமளிக்குமாறும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.