ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் யுத்த வெற்றிவிழா கொண்டாட்டம்
தமிழினப் படுகொலையை குறிக்கும் முள்ளிவாய்க்கால் தினத்தை தமிழ் மக்கள் நேற்று உணர்வுபூர்வமாக நினைவுகூர்ந்திருந்த நிலையில், அதனை தேசிய யுத்த வெற்றிவீரர்கள் தினமாக ஸ்ரீலங்கா அரசாங்கம் இம்முறையும் கொண்டாடியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள நாடாளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் உள்ள படைவீரர்கள் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்ததில் இராணுவம், விமானப்படை, கடற்படை, காவல்துறை மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 28 ஆயிரத்து 619 படைவீரர்கள் தாய் நாட்டுக்காக தங்களது உயிர்களை அர்ப்பணித்தார்கள் எனவும் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனமுற்றனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது.
உயிரிழந்த படைவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஏனைய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேசிய யுத்த வெற்றிவீரர்கள் தின நிகழ்வுகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் நடத்தியுள்ளது.
ஸ்ரீலங்காவின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை ரணவிரு அதிகார சபையின் பதில் தலைவர் சோனியா கோட்டேகொடவினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதைக்கு மத்தியில் விமானப் படையினர் விமானம் மூலம் மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் உட்பட அமைச்சர்கள், பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், படைவீரர்கள் நினைவுத் தூபிக்கு மலர் வளையங்களை வைத்து படைவீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.



