எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்: அனுர பகிரங்கம்
சிறிலங்காவின் அதிபர் தேர்தல், பொதுத்தேர்தல் என்ற வேறுப்பாடில்லை, எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற ஓய்வூதியலாளர்களின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, “நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு, அதேபோல் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதமளவில் அதிபர் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு (Election Commission of Sri lanka) உண்டு. ஆகவே இவ்விரு தேர்தல்களும் நிச்சயம் வெகுவிரைவில் இடம்பெறும்.
தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள்
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்பது தற்போதைய பிரதான பேசுபொருளாகக் காணப்படுகிறது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe), பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக் கூற வேண்டிய பசில் ராஜபக்சவுக்கும் (Basil Rajapaksa) இடையில் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு, பதவிக் காலம் நிறைவடையும் வரை பதவியில் இருக்க ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பாரே தவிர பதவிக் காலத்தை வரையறுத்துக்கொள்ளமாட்டார்.
அதிபர் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்தால் அதிபருக்கு அதனால் எவ்வித பயனும் கிடைக்காது. அதிபர் வசமுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, செஹான் சேமசிங்க உட்பட பெரும்பாலானோர் அதிபரை விட்டு மீண்டும் பொதுஜன பெரமுன பக்கம் செல்வார்கள்.
பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட்டால் அது அதிபர் தேர்தலுக்கும் செல்வாக்கு செலுத்தும். பொதுத்தேர்தலின் பெறுபேறுகள் ரணிலின் மக்களாணையின் பலத்தை உறுதிப்படுத்தும் ஆகவே பொதுத்தேர்தலுக்கு சென்றாலும் செல்லாவிட்டாலும் அதிபர் நெருக்கடிக்குள்ளாகுவார்.
ராஜபக்சர்களின் அரசியல்
அதிபர் தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தும் தேவை பசில் ராஜபக்சவுக்கு உண்டு. அதிபர் தேர்தலில் களமிறக்க வேட்பாளர் ஒருவர் ராஜபக்சர்களிடம் இல்லை என்பதால் அவர்கள் பொதுத்தேர்தல் குறித்து அக்கறை கொண்டுள்ளார்கள்.
அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வெற்றி பெற்றால் ராஜபக்சர்களின் அரசியல் அத்துடன் நிறைவடையும் என்பதை அவர்ர்கள் நன்கு அறிவார்கள்.
பண்டாரநாயக்கர்களின் அரசியல் செல்வாக்கை மகிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்டதை தொடர்ந்து பண்டாரநாயக்கர்களின் அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது, ஆகவே இது போன்ற நிலை பொதுஜன பெரமுனவுக்கும் ஏற்படுமா என்ற அச்சம் ராஜபக்சர்களுக்கு உண்டு.
ஆகவே அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதை ராஜபக்ச குடும்பம் விரும்பவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்சர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டும் இன்றும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் இடம்பெற வேண்டிய நிலையில் தமது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக தேர்தல்களை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார்கள்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு
எந்த தேர்தல் முதலில் இடம்பெற்றால் தமக்கும்,தமது குடும்பத்துக்கும் பயன் கிடைக்கும் என்பதை பற்றி சிந்திக்கின்றார்களே தவிர மக்களின் நிலைப்பாடு மற்றும் அரசியல் சிந்தனைகள் பற்றி ராஜபக்சர்கள் யோசிக்கவில்லை.
அதிபர் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் முறையாக நடத்தப்படும். அதிபர் தேர்தல், பொதுத்தேர்தல் என்ற வேறுபாடில்லை. எந்த தேர்தலுக்கும் நாங்கள் தயார்.வெற்றியோ, தோல்வியோ அதனை நாங்கள் எதிர்கொள்வோம்.
எந்த தேர்தல் முதலில் நடத்த வேண்டும் என்று பொதுஜன பெரமுன தீர்மானிக்குமாயின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதற்கு“ என கேள்வியெழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |