சிறிலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம் - பிரித்தானியா உறுதி
சிறிலங்காவின் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவசியமான அழுத்தங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அந்தப் பதிவில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கரிசனைகளை ஏற்றுக் கொள்கின்றேன்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் விமர்சகர்கள் உள்ளடங்கலாக இலங்கை தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்த ஆணையாளரின் அதிருப்தியை ஏற்றுக்கொள்கின்றேன்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறிலங்காவில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையின சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தங்களை பிரித்தானியா தொடர்ச்சியாக வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.