ஒருபோதும் செல்லமாட்டோம் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு
எதிர்வரும் 21-ம் திகதி பாடசாலைகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்னர் ஆசிரியர்-அதிபர்களின் சம்பள முரண்பாடு பிரச்சினை தீர்க்கப்படவேண்டும்.தவறின் அவர்கள் அன்று பணிக்கு வரமாட்டார்கள் என்று ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்பே ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்த 13 நாட்களுக்குள் இது குறித்து அரசு முடிவெடுக்க முடியும் என்றுஜெயசிங்க கூறினார். அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அனைத்து ஆசிரியர் மற்றும் அதிபர்களின் கூட்டங்களை புறக்கணிக்க ஏற்கனவே முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், 200 க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் இன்று (8) கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர், ஆனால் அதிபர்கள் அந்த கோரிக்கையை புறக்கணித்தனர். அத்தகைய அழைப்புகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும் என்று கல்விச் செயலாளர் மற்றும் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக அவர் கூறினார்.
ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கப் போராட்டம் 89 நாட்கள் கடந்துவிட்டதாகவும், இந்தக் காலகட்டத்தில் அரசு மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வண. பன்னசேகர தேரர் கூறுகையில், சம்பள முரண்பாடுகளை தீர்க்காமல் பாடசாலைகள் திறக்கப்பட்டால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தார்.