மேற்குதிசையில் நகர்ந்து கொண்டிருக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம்! காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இன்றிலிருந்து மழை நிலைமை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
இலங்கைக்கு வடகிழக்காக வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்குதிசையில் நகர்ந்து கொண்டிருப்பதுடன், இன்று தென் ஆந்திரப் பிரதேசத்தையும் அண்மையாகவுள்ள வட தமிழ்நாடு கரையையும் அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாகதிருகோணமலை வரையான கடற்பரப்புகளில் இன்று வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
ஏனைய கடற்பரப்புகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாகவும் எதிர்கால முன்னறிவிப்புகள் தொடர்பாகவும் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.