நிலவும் மோசமான வானிலை - அதிகரிக்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை
புதிய இணைப்பு
மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலை தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 13 ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அண்மைய நாட்களில் பெய்த கனமழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர்.
அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்தில், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 1,369 குடும்பங்களைச் சேர்ந்த 4,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
நேற்றைய (25) நிலவரப்படி, சில மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26.1.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
ஓரளவு பலத்த காற்று
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |