சீரற்ற காலநிலை- விசேட கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ குழு!
கிளிநொச்சி மாவட்டத்தில் பருவகால மழை வீழ்ச்சி ஆரம்பிக்கப்பட இருக்கும் நிலையில் பொது மக்கள் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னாயத்தம் தொடர்பாக ஆராயும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவின் விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் கோகுல்ராஜ் ஒருங்கிணைப்பில் இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்காலத்தில் மழையுடன் கூடிய காலநிலை நிலவினால் அச்சந்தர்ப்பத்தில் பிரதேச செயலக பிரிவுகள் ரீதியாக அதிலும் குறிப்பாக மாவட்டத்தில் வெள்ளத்தினால் அதிகமாக பாதிப்பிற்குள்ளாகும் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கடந்த காலங்களில் அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பான விபரங்கள் இதன்போது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் காண்பிக்கப்பட்டிருந்தது.
கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள குளங்கள் உடைப்பெடுக்கும் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பாவும் மாவட்டத்தில் உள்ள பாரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இவ்விசேட கலந்துரையாடலில் மாவட்டத்தின் 04 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள் காவல்துறை மற்றும் பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் ஏனைய துறைசார் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.