வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட விவகாரம்- விசேட நீதிபதிகள் குழாம் விடுத்துள்ள அறிவிப்பு!
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காவல்துறை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் முன்னாள் காவல்துறை பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறிலங்கா சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தீர்ப்பை எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு அறிவிப்பதாக, கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டிஆரச்சி மற்றும் மஞ்சுல திலகரட்ன ஆகிய மூவரடங்கிய மேல்நீதிமன்ற விசேட நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் 8 சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டமா அதிபரினால் வழக்கின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த சிறைச்சாலைகளின் முன்னாள் உளவுப்பிரிவு அதிகாரியான இந்திக்க சம்பத் என்பவர் வழக்கு தொடரப்பட்ட சந்தர்ப்பத்தில் வெளிநாடு சென்றிருந்தார்.
அவரின்றி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், முறைப்பாட்டாளர் தரப்பினரால் அவருக்கு எதிரான சாட்சிகள் முன்வைக்கப்படவில்லை என சாட்சி விசாரணைகளின் நிறைவில் நீதிபதிகள் குழாம் தெரிவித்தது.
அதற்கிணங்க, குறித்த பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்த நீதிபதிகள் குழாம், நியோமால் ரங்கஜீவ மற்றும் எமில் ரஞ்சன் லமாஹேவா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு விசாரணையை தொடர்ந்தும் முன்னெடுத்தது.
2012 நவம்பர் 09 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட கலகத்தின் போது 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தாலும் 08 கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே வழக்கை தாக்கல் செய்வதற்கு போதுமான சாட்சிகள் சட்டமா அதிபருக்கு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஜனவரி 6 ஆம் திகதியான இன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த நிலையில், வழக்கு விசாரணை 11.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது திறந்த மன்றில் பேசிய தலைமை நீதிபதி கிஹான் குலதுங்க, இந்த வழக்கின் தீர்ப்பு எழுதப்பட்டு முடிக்கப்பட்டுள்ள போதும், தட்டச்சு பிழைகள் உள்ளிட்டவற்றை நீக்க சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும், தீர்ப்பு பூரணமாக தயாராகாத நிலையில் வழக்கின் தீர்ப்பினை பிறிதொரு தினத்தில் அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
அதன்படியே, தீர்ப்பை எதிர்வரும் 12ஆம் திகதி பிற்பகல் 1.30 மனிக்கு அறிவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.