புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு சுமையா? அரசுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை
நாட்டில் பரப்பப்பட்டுள்ள இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை அரசியலுக்காக பயன்படுத்துவதை நிராகரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன (Iran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“சகல இனத்திலும் ஒரு சிறிய குழு இனவாதத்தை பரப்புகின்றது, ஆனால் அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப் படுத்தினாலும் பெரும்பாலான தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே உள்ளனர்.
எனவே புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். இவர்கள் உயரிய கல்வி மட்டத்தில், திறமையான, நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர்.
அவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும், எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும்.
இன்று நாடு பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது, இன்றுள்ள சவால்களில் அரசதலைவரினால் கொரோனா சவால்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது.
ஏனைய சகல சவால்களும் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவையாகும். செயலணிகளை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதாக அரசாங்கம் ஒரு சித்திரத்தை காட்டி வருகின்றது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த செயலணி ஒன்றை உருவாக்கினர். அத்தியாவசிய பொருட்களை பங்கிடும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது,வறுமை ஒழிப்பை மேற்கொள்ள வேறொன்று, பொருளாதார மீள் எழுச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என ஒரு செயலணி உருவாக்கப்பட்டது.
இவ்வாறு செயலணிகள் ஒரு பக்கமும் சட்ட நிறுவனங்கள் இன்னொரு பக்கமும் இயங்கிக்கொண்டுள்ளன.
இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் மக்களின் வரிப்பணமே செலவழிக்கப்படுகிறது. செயலணிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றால் அமைச்சரவைக்கு இருக்கும் பொறுப்புகள் என்ன?
இந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுள்ளது, இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைமை உருவாகும்” என்றார்.