ஒரே ஆண்டில் 900 இற்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை : எந்த நாட்டில் தெரியுமா !
கடந்த ஒன்பது ஆண்டுகளில் அதிகபட்சமாக ஈரானில் (Iran) 2024 இல் 900 இற்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானில் கடந்த ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றங்களில் கூர்மையான அதிகரிப்பு ஏற்பட்டு இருப்பது குறித்த கவலையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வோல்கர் டர்க் (Volker Türk) வழங்கிய தகவலில், 2024 ஆம் ஆண்டில் குறைந்தது 901 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், இது 2023 ஆம் ஆண்டில் பதிவான 853 பேரை விட கணிசமான அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மோசமான எண்ணிக்கை
இந்த மோசமான எண்ணிக்கை கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றங்களில் அதிகபட்சமாகும்.
ஈரானிய அதிகாரிகள் இந்த அச்சுறுத்தும் போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மரண தண்டனைக்கு முக்கிய காரணமாக இருந்தாலும், எதிர்ப்பாளர்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டு போராட்டங்களுடன் தொடர்புடைய நபர்கள் தூக்கிலிடப்பட்டதையும் ஐக்கிய நாடுகள் எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களில் பெண்களின் எண்ணிக்கையும் கவலைக்குரிய அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2024வரை, ஈரானில் 241 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் 2024 இல் மட்டும் 31 பெண்களுக்கு ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        