உலக அழிவை கணிக்கும் கடிகாரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா...!
உலக அழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் தான் இருக்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா, ஆம் அணு ஆய்வாளர்கள் கணித்த டூம்ஸ்டே கடிகாரத்தின் நேரப்படி உலக அழிவிற்கு இன்னும் 90 வினாடிகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டூம்ஸ்டே கடிகாரம் என்றால் என்ன, அதில் குறிக்கப்படும் நேரம் சொல்லும் செய்தி என்பன பற்றி தெரிந்து கொள்வோம்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய அணு ஆயுதங்களும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும், வரலாற்றில் அழிக்கவே முடியாத ஒரு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை.
உலகம் அழியும் ஆபத்து
இந்த அணுவாயுதம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜே ராபர்ட் ஓப்பன்ஹைமர் ஆகியோர் இணைந்து இந்த டூம்ஸ்டே கடிகாரத்தை உருவாக்கினர்.
ஜப்பானில் அணுக்குண்டு வீசப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1947இல் முதலில் இந்த டூம்ஸ்டே கடிகாரம் உருவாக்கப்பட்டது.
அணு ஆயுதங்கள், போர் சூழும் அபாயம். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் என்று பல்வேறு விடயங்கள் இந்த கடிகாரத்தின் மூலம் கணக்கிடப்படுகிறது.
இதன் மூலமாக உலகம் அழியும் ஆபத்து எந்தளவுக்கு இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒரு நேரத்தை நிர்ணயம் செய்வார்கள்.
பேரழிவுக்கு அருகில்
இதில் நேரம் எந்தளவுக்குக் குறைவாக இருக்கிறதோ. அந்தளவுக்கு நாம் பேரழிவுக்கு அருகே உள்ளோம் என்று அர்த்தமாகும் எனக் கூறப்படுகிறது.
பல்வேறு ஆய்வாளர்கள் இணைந்து ஆண்டுதோறும் இந்த டூம்ஸ்டே கடிகாரத்தை கணக்கிடுகிறார்கள், இதன் மூலம் நாம் அழிவுக்கு எந்தளவுக்கு அருகே உள்ளோம் என்பதைத் தெரியப்படுத்துகிறார்கள்.
கடந்த 1947இல் இது முதலில் கணிக்கப்பட்ட போது 7 நிமிடங்களாக இருந்தது, அதன் பிறகு பல நேரங்களில் அதிகரித்தும் குறைந்தும் இருந்திருக்கிறது,இதில் 1963, 1972 ஆகிய ஆண்டுகளில் அதிகபட்சமாக 12 நிமிடங்களாக இருந்து.
2010க்கு பிறகு தொடர்ச்சியாக இதன் நேரம் குறைந்தே வரும் நிலையில், இந்த ஆண்டு அதற்கான நேரமாக 90 நொடிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்கள்
உக்ரைனில் போர், அதிகரிக்கும் அணு ஆயுத பதற்றம் ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என்றும் குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் அணு ஆயுதங்களை அதிகரிப்பது இந்த நேரக் குறைவிற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அணு ஆயுதங்களில் எதாவது சிறு தவறு நடந்தாலும் அது பேரழிவைத் தரும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே டூம்ஸ்டே கடிகாரம் தனது நேரத்தை 90 வினாடிகளாக நிர்ணயித்துள்ளது, இதே போல் கடந்த 2022ஆம் ஆண்டு 100 வினாடிகளாக காணப்படுகிறது, இதனால் மனித இனம் தொடர்ந்து மிகப் பெரிய ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |