யார் இந்த ஹமாஸ் குழுவினர் : ஓர் பின்னணி
இன்று முழு உலகிற்குமே பேசுப்பொருள் என்றால், அது இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரம் தான்.
முன்னெப்போதுமில்லாத வகையில் எல்லைப் பகுதிக்குள் ஹமாஸ் வீரர்கள் ஊடுருவி இஸ்ரேலில் தாக்குதலை நடத்தியிருப்பது இஸ்ரேலையும் அதன் நட்பு நாடுகளையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
2007 முதல் காசா பகுதியில் ஆட்சி புரிந்துவரும் ஹமாஸ், கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோரை கொன்றதுடன், எண்ணற்றோரைப் பிணைக் கைதிகளாக பிடித்துள்ளது.
யார் இந்த ஹாமாஸ் குழுவினர், அவர்களின் தோற்றம், நோக்கம் என்பன பற்றி இப்பதிவின் ஊடாக அறிந்துக்கொள்வோம்.
தோற்றம்
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பரவலான போராட்டங்கள் நடைபெற்ற முதல் எழுச்சிக் காலத்தில், 1987 ஆம் ஆண்டில், காசாவில் வசித்த பாலஸ்தீன அகதியான ஷேக் அகமது யாசின் என்பவரால் ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இஸ்ரேலிய அரசை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று உறுதியேற்றுள்ள இந்தக் குழு, பல்வேறு தற்கொலைத் தாக்குதல்களுக்கும் இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் மக்கள் மீதான மோசமான தாக்குதல்களுக்கும் பொறுப்பேற்றுள்ளது.
1997 ஆம் ஆண்டில், ஹமாஸை ஒரு பயங்கரவாதக் குழுவாக அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்தது. ஐரோப்பிய ஒன்றியமும் பிற மேற்கத்திய நாடுகளும்கூட இதை ஒரு பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றன.
இதனால் காசாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அனைவரையும் இஸ்ரேல் தண்டிப்பதாக பாலஸ்தீனர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஏற்கனவே, கத்தார், துருக்கி போன்ற அரபு நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ள ஹமாஸ், அண்மைக்காலமாக ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுடனும் நெருக்கமாகியுள்ளது.
தலைமைத்துவம்
ஹமாஸின் நிறுவனர் - தலைவரான யாசின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் காலத்தைக் கழித்தவர். இஸ்ரேலிய சிறைகளில் பல ஆண்டுகள் வைக்கப்பட்டிருந்த இவருடைய மேற்பார்வையில்தான் ஹமாஸின் இராணுவ அமைப்பு உருவாக்கப்பட்டது.
1993 இல் தனது முதல் தற்கொலைத் தாக்குதலை இந்த அமைப்பு நடத்தியது. எப்போதுமே ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டுவரும் இஸ்ரேலிய படைகள், 2004 இல் யாசினைக் கொன்றன.
இதைத் தொடர்ந்து, ஏற்கெனவே இஸ்ரேலிய படுகொலை முயற்சியில் உயிர்தப்பி, வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருந்த காலித் மஷால், ஹமாஸ் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
நோக்கம்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளை விடுவிப்பதற்கான வழிமுறையாக எப்போதும் ஆயுதப் போராட்டத்தையே ஹமாஸ் ஆதரித்து வந்துள்ளதுடன், இஸ்ரேலை அழித்தொழிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் பல தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. கடந்த காலங்களில் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் பல்லாயிரக்கணக்கான அதிக சக்திவாய்ந்த ஏவுகணைகளைச் செலுத்தியுள்ளது.
மேலும் ஆயுதக் கடத்தலுக்காக எகிப்துக்கும் காசாவுக்கும் இடையே சுரங்கப் பாதைகளையும் அமைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, இஸ்ரேலைத் தாக்குவதைவிட காசாவை நிர்வகிப்பதில் ஹமாஸ் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
தாக்குதலுக்கான காரணம் என்ன?
அண்மைக் காலமாக, பாலஸ்தீனர்கள் தொடர்பாக எந்த விட்டுக்கொடுப்புமில்லாமல் அரபு நாடுகளுடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.
ஹமாஸின் ஆதரவாளர்களான ஈரானுடைய மோசமான எதிரியான சௌதி அரேபியாவுடன் இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான முன்முயற்சிகளை அண்மைக்காலமாக அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது.
இதனிடையே, பாலஸ்தீன எதிர்ப்புக்கு மத்தியிலும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியிருப்புகளை உருவாக்கும் நோக்கில் இஸ்ரேலிய அரசு செயல்பட்டு வருகிறது.
இதனை எதிர்க்கும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.