காணாமல் ஆக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளையும் தடுக்கும் சரத்வீரசேகர - மனித உரிமைச்சபையின் பதிலென்ன?
ஈழப் போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பொதுமக்கள் மற்றும் போராளிகள் இலங்கைப் பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்தனர். சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் வன்னிப் பெருநிலப்பரப்பில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதொரு நிலையில், சாட்சியங்கள் இன்றி நடத்தப்பட்ட போரின் பின்னரான சூழலிலேயே இவர்கள் சரணடைந்திருந்தனர்.
இவ்வாறு சரணடைந்தவர்கள் தொடர்பாக இதுவரையில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அவர்களது உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் காணாமல் போனோரை கண்டறிவதற்காக அரசாங்கத்தினால் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் 2017 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இவ் அமைப்பு காணாமல் போனோரைத் தேடிக் கண்டு பிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளதெனக் கூறப்பட்டாலும், அதன் செயற்பாடு வெறுமனே காணாமல் போனோர் பற்றிய தகவல்களை வழங்குவதுடன் அவர்களுக்கான நட்டஈடு வழங்கப்படுவதையும் மாத்திரமே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறான செயற்பாட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றிலுமாக எதிர்த்திருந்தனர்.
இவ்வாறானதொரு நிலையிலேயே தற்போது அந்த அலுவலகத்தினுடைய செயற்பாடுகளை முற்றாகத் தடைசெய்ய வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அதுவும் இறுதிப் போரில் ஈடுபட்ட படைத் தளபதி ஒருவர் தற்போது அமைச்சராகப் பதவி வகித்திருக்கும் நிலையில் அவ்வாறு கூறியிருப்பது பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அமைச்சருடைய கருத்து அதிர்சியளிக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதென்பது ஒரு மனிதாபிமான செயற்பாடு என்றும் அதற்கு எதிர்ப்பு வெளியிடுவதென்பது நல்லிணக்க செய்ற்பாடுகளை எதிர்ப்பதற்கு ஒப்பானது என்றும் ஹர்ச டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் அபிவிருத்தியை நோக்கியே இலங்கை அரசாங்கம் பயணிக்கிறது என்பது வெளிப்படை.
இலங்கையை பௌத்த மத கொள்கைகளுக்கு ஏற்பவே ஆட்சி செய்வேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்துள்ள நிலையில், தமிழர்களின் அரசியல் ரீதியிலான அபிலாசைகள் எட்டப்படுமா என்பது கேள்விக்குரிய விடயமாகும் எனவும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.