மக்கள் பிரச்சினையில் உள்ளபோது அரசாங்கம் சித்திரம் காட்டிவருகிறது - எதிரணி குற்றச்சாட்டு
நாடு இன்று பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது, இன்றுள்ள சவால்களில் அரச தலைவரினால் கொரோனா சவால்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன (Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
செயலணிகளை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதாக அரசாங்கம் ஒரு சித்திரத்தை காட்டி வருகின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஒதுக்கீட்டுச் (திருத்த) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
நாடு இன்று பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. இன்றுள்ள சவால்களில் அரச தலைவரினால் கொரோனா சவால்களை மட்டுமே வெற்றிகொள்ள முடிந்துள்ளது. ஏனைய சகல சவால்களும் இந்த அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டவையாகும்.
செயலணிகளை அமைத்து சவால்களை வெற்றிகொள்வதாக அரசாங்கம் ஒரு சித்திரத்தை காட்டி வருகின்றது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த செயலணி ஒன்றை உருவாக்கினர்.
அத்தியாவசிய பொருட்களை பங்கிடும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது. வறுமை ஒழிப்பை மேற்கொள்ள வேறொன்று, பொருளாதார மீள் எழுச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு என ஒரு செயலணி உருவாக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது, ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையில் சட்டம் இயற்ற இப்போது புதிதாக ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயலணிகள் ஒரு பக்கமும் சட்ட நிறுவனங்கள் இன்னொரு பக்கமும் இயங்கிக்கொண்டுள்ளன.
இந்த இரண்டு செயற்பாடுகளுக்கும் மக்களின் வரிப்பணமே செலவழிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல செயலணிகளுக்கு நியமிக்கப்படும் நபர்கள் குறித்து எம்மத்தியில் முரண்பாடுகள் எழுந்துள்ளன. இவர்கள் செயலணிகளுக்கு தகுதியானவர்களா என்ற கேள்வி எழுகின்றது.
கடந்த காலங்களில் அரச தலைவரிற்க உதவி செய்ததற்காக இவ்வாறு செயலணிகளுக்கு இவர்கள் நியமிக்கப்படுகின்றார்களா என்ற கேள்வியையே கேக்கவேண்டியுள்ளது.
செயலணிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றால் அமைச்சரவைக்கு இருக்கும் பொறுப்புகள் என்ன? இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை நாட்டில் பரப்பியுள்ளனர். இனவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் அரசியலுக்காக பயன்படுத்துவதை நாம் நிராகரிக்க வேண்டும்.
சகல இனத்திலும் ஒரு சிறிய குழு இனவாதத்தை பரப்புகின்றது, ஆனால் அதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழர் அமைப்புகள் என அடையாளப் படுத்தினாலும் பெரும்பாலான தமிழ் புலம்பெயர் அமைப்புகள் நாட்டை நேசிக்கும் தரப்பாகவே உள்ளனர்.
எனவே புலம்பெயர் அமைப்புகள் நாட்டுக்கு வளமா அல்லது சுமையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.
உலகில் உள்ள மிகப்பெரிய புலம்பெயர் அமைப்புகளில் இலங்கையின் புலம்பெயர் அமைப்பும் ஒன்றாகும். இவர்கள் உயரிய கல்வி மட்டத்தில், திறமையான மற்றும் நிதி ரீதியில் பலமாகவும் உள்ளனர்.
அவர்களால் நாட்டிற்கு உதவி செய்ய முடியும், எனவே அவர்கள் குறித்து நிதி அமைச்சர் சிந்திக்க வேண்டும் என் அவர் தெரிவித்துள்ளார்.