கோட்டாபயவும் மகிந்தவும் கொடுத்த வாக்குறுதி எங்கே?
அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை செய்து தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் உறுதிமொழி வழங்கிய போதிலும் இதுவைரயில் அர்த்தபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் இந்த அரசாங்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியுள்ளது என்பது புலனாகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்ட அவர், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சிலர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.