ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்! சபையில் மீண்டும் வலியுறுத்திய சரத் வீரசேகர
ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதில் தாமதம் நிலவுவதற்கு காரணம், தற்போதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாட்டை பயன்படுத்தி தப்பி செல்லாதிருப்பதற்காக குறைபாடுகளை களைவதற்காக முறையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பான முழுமையற்ற விசாரணை காரணமாக சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர முடியவில்லை என்றும் சட்டமா அதிபர் தப்புல த லிவேரா அளித்த சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பாக விசேட அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்த சம்பவம் தொடர்பாக 32 சந்தேக நபர்களுக்கு எதிராக 9 வழக்குகளை விரைவாக பதிவு செய்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்பதை அமெரிக்க FBI உறுதிப்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலில் பல வெளிநாட்டவர்கள் தொடர்புபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதற்கமைவாக இலங்கை வம்சாவளியான அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த லுக்மான் தாலிப் என்பவர் ஏற்கனவே கட்டார் நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், 4 மாலைத்தீவு பிரஜைகள் இந்த பயங்கரவாதத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருப்பதற்கான தகவல்கள் இருப்பதாகவும் சபையில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.