தொடரும் சீரற்ற வானிலை! காய்கறி விலைகள் சடுதியாக அதிகரிப்பு
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, மலையகம் மற்றும் ஊவா மாகாணங்களில் காய்கறிகளின் மொத்த விற்பனை விலைகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய காய்கறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிமல் ஹேவாவித்தாரண, காய்கறி பயிர்ச் செய்கை நிலங்கள் மழையினால் சேதமடைந்தமை, போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தமை மற்றும் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டமை ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, நுவரெலியா, கெப்பட்டிபொல, தம்புள்ளை மற்றும் தம்புத்தேகமை ஆகிய விசேட பொருளாதார மையங்களில் காய்கறிகளின் மொத்த விலைகள் அதிகரித்துள்ளன.
மொத்த வியாபாரிகளின் வருகை
இந்த நிலையில், சந்தைகளுக்கு காய்கறிகளைக் கொள்வனவு செய்ய வரும் மொத்த வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளதோடு, காய்கறி விநியோகமும் 20 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஹேவாவித்தாரண தெரிவித்துள்ளார்.

தக்காளி, போஞ்சி, கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகிய பயிர்கள் கடும் மழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரத்திலும் மழை நீடித்தால், நாடு முழுவதும் காய்கறி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உரத் தட்டுப்பாடு
காலநிலை மாற்றம் மட்டுமன்றி, உரத் தட்டுப்பாடு, கிருமிநாசினிகளின் அதிக விலை மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவையும் காய்கறிச் செய்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் விலை உயர்வு காய்கறிகளை மொத்த சந்தைகளுக்குக் கொண்டு செல்வதிலும், அங்கிருந்து விநியோகிப்பதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |