லொஹான் ரத்வத்தையை கைது செய்ய காவல்துறை பின்வாங்குவது ஏன்? எழுப்பப்படும் கேள்வி
இலங்கையில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை அதிரடியாகக் கைது செய்து சிறைதள்ளும் ஸ்ரீலங்கா காவல்துறை ஏன், தமிழ்க் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை கைது செய்யவில்லை என சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் தலைவரான சட்டத்தரணி சேனக்க பெரேரா, லொஹான் ரத்வத்தவிடம் இருந்த துப்பாக்கி குறித்து நீதிமன்றத்தில் இன்றைய தினம் விபரங்களைக் கோர எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குப் பிரவேசித்து செய்த செயற்பாடு குறித்து ஏன் இதுவரை குற்றவியல் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற சந்தேகம் எமக்குள் எழுந்துள்ளது. பஹன்துடாவ சுற்றுலாத் தலத்தில் ஆபாசமாக நடந்துகொண்ட இருவரை சில மணிநேரத்திற்குள் குற்றவியல் விசாரணைத் திணைக்க அதிகாரிகள் கைது செய்தார்கள்.
அதேபோல ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை கைது செய்யவும் சிறையில் தள்ளவும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் துரிதமாக செயற்படுகிறார்கள். ஆனால் லொஹான் ரத்வத்த விடயத்தில் ஏன் பின்வாங்குகின்றார்கள் எனத் தெரியவில்லை.
ஒரே நாடு என்றாலும் ஒரே சட்டம் என்பது இங்கு இல்லை. இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
லொஹான் ரத்வத்த பயன்படுத்திய துப்பாக்கி உண்மையில் அரசாங்கம் வழங்கியதா என்பது பற்றி அறிய இன்றையதினம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கேட்க எதிர்பார்க்கின்றோம். தற்போது அநுராதபுரம் சிறைச்சம்பவம் பற்றி விசாரணை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் வெலிக்கடை சிறைப்படுகொலை குறித்து விசாரணை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் இந்த குழு அமைப்பு என்பது வெறும் கண்துடைப்பாகும்.