கோட்டாபய மீது கடும் விமர்சனம் -விஜயதாச மீது பாய்கிறது ஒழுங்கு நடவடிக்கை
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை விமர்சித்த நிலையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது போன்ற விஷயங்களை கையாள்வதற்கும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் பொதுஜனபெரமுன ஒரு அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் அந்த முறை பின்பற்றப்படும் என்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை செய்தித் தொடர்பாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
விஜயதாச ராஜபக்சவின் அரசியல் வரலாறு மற்றும் நடவடிக்கை பொதுமக்களால் நன்கு அறியப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவால் தன்னை வாய்மொழியாக அச்சுறுத்தியதாக விஜயதாச ராஜபக்ஷ நேற்று கூறியிருந்தார். தொலைபேசி உரையாடலின் போது ஜனாதிபதி தன்னை அச்சுறுத்தியதாக தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக பொருளாதார ஆணையம் மசோதா மற்றும் அதிலிருந்து ஏற்படக்கூடிய கடுமையான தாக்கங்கள் குறித்து விஜயதாச எம்.பி. கவலைகளை எழுப்பியிருந்தார். அதன்பின்னர் ஜனாதிபதி தன்னைத் தொடர்புகொண்டு மோசமான மற்றும் அச்சுறுத்தும் விதத்தில் பேசியதாக அவர் தெரிவித்திருந்தார்.
விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி ஒரு ஜனாதிபதியைப் போலவே இராஜதந்திர ரீதியில் பேசுவார் என்று தான் எதிர்பார்த்ததாக கூறினார். "இருப்பினும், அவர் ஒரு அரச தலைவருக்குப் பொருந்தாத வகையில் பேசினார்," என்று அவர் தெரிவித்தார். அதே தொனியில் பதிலளிப்பதைத் தவிர வேறு வழி தனக்கு இருக்கவில்லை என்று விஜயதாச ராஜபக்ஷ கூறினார்.
"எங்கள் பாதுகாப்பு குறித்து இப்போது எங்களுக்கு கவலைகள் உள்ளன," என்று அவர் தெரிவித்ததுடன்
அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்..
தன்னை அச்சுறுத்தியதுபோன்றே ஜனாதிபதி மற்றவர்களையும் அச்சுறுத்தியதாக விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.