வேலணை வயல்வெளிகளை தீ மூட்டும் விசமிகள்!
வேலணை வயல்வெளிகளுக்கு இனம் தெரியாதவர்கள் தீ மூட்டியதால் மக்களுடன் கால்நடைகளும் மற்றும் பறவைகளும் பாதிப்படைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் இருக்கும் வயல் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதால் புற்கள் சுடர்விட்டு பற்றி எரிந்து வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலை உருவாகியுள்ளதுடன் கால்நடைகளும் பெரும் அசௌகரியங்களை சந்தித்துள்ளன.
இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளருக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கை
இதையடுத்து, துரித நடவடிக்கை மேற்கொண்டதன் பிரகாரம் யாழ் மாநகர சபையின் தீயணைப்பபு வாகனம் குறித்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு பிரதேச சபை உறுப்பினர்களான அனுசியா ஜெயகாந்த், சுவமினாதன் பிரகலாதன், கருணாகரன் நாவலன் மற்றும் செந்தமிழ்ச் செல்வன் கேதீஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று தீப் பரவலை கட்டுப்படுத்தும் துறைசார் அதிகாரிகளுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீயணைப்பு படையினர்
வீசும் கடும் காற்றுக் காரணமாக பெரும் சுடர்விட்டு எரிந்த தீயை தீயணைப்பு படையினர் பலமணி நேரம் போராடி கட்டுப்படுத்தியுள்ளனர்.
இதேநேரம் அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியில் இருந்து அராலிச் சந்தி வரையான பல கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வயல் வெளிகளில் உள்ள புற்களுக்கு வருடா வருடம் விசமிகள் தீமூட்டி வருவதும் அதை அணைப்பதும் தொடர் கதையாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த சட்டவிரோத செயலைச் செய்யும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது பிரதேசத்தின் அதிகாரிகள் திணறிவருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரணாலயம்
பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள குறித்த பகுதிக்கு பருவ காலங்களில் வெளி நாடுட்டு பறவைகள் அதிகளவில் வருகை தரும் அவை தமது இனப்பெருக்கங்களை செய்வதும் வழமை.
இவ்வாறு தீ வைக்கப்படுவதால் பறவைகள் சரணாலயமும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேநேரம் இவ்வாறு தொடர்ச்சியாக புற்றரைகள் தீவைக்கப்படுவதால் அந்த புற்களை உணவாக கொள்ளும் கால்நடைகளும் உணவின்றி குடிமனைகளுக்கு செல்லும் நிலையும் அதனால் கட்டாக்காலி தொல்லை என பிரச்சினைகள் உருவாகி மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

