எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமா..!அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
நேற்று (31) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்ட நிலையில் எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமா என்பதற்கு அரசாங்கம் இன்று (01) பதில் வழங்கியுள்ளது.
இதன்படி எரிபொருள் விலையை மேலும் குறைக்க முடியாது என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
எங்களுக்கும் விருப்பம்தான்
எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று நாங்களும் விரும்புகிறோம். ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், நாங்கள் இன்னும் சர்வதேச நாணய நிதியதின் (IMF) நிபந்தனைகளுடன் இருக்கிறோம்.
அத்துடன் அரசாங்கத்திற்கு வருமானம் இருக்க வேண்டும், சடுதியாக விலையை குறைப்பது கடினம். நாங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பக்கம் செல்ல வேண்டியிருக்கிறது.
இந்திய பிரதமருடனான ஒப்பந்தம் - குறைவடையப்போகும் மின்கட்டணம்
அதனால்தான் இந்திய பிரதமர் இங்கு வரும் போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான ஒப்பந்தங்களை நோக்கி செல்லவுள்ளோம். அப்படி சென்றுதான் எங்களால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.
எரிபொருளுடனும் எங்களுக்கு ஒரு சமநிலைப்படுத்தல் செய்ய வேண்டியிருக்கிறது. இதை சர்வதேச நாணய நிதியம் அறிந்திருக்கிறது.அந்த இடத்திற்கு உடனடியாக செல்ல முடியாது. ஆனாலும், அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பலமுறை எரிபொருள் விலையை குறைத்திருக்கிறோம். இந்த முறை 10 ரூபாவால் குறைத்திருந்தாலும், இதற்கு முன்பும் அரசாங்கம் பல்வேறு அளவுகளில் விலையை குறைத்துள்ளது." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

