வடக்கு கிழக்கில் இராணுவமயம் நீங்குமா...
நாம் இராணுவ மயம் சூழ்ந்த ஒரு நிலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுவும் எப்படியான இராணுவம் என்பது தான் நமக்குள் பல சிக்கல்களை உருவாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், நம்மீது பெரும் வன்முறைகளை மேற்கொண்ட இராணுவத்தினரால் சூழப்பட்ட நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு பல அழுத்தங்களை உருவாக்கக் கூடியது.
உண்மையில் அத்தகைய அழுத்தங்களை ஏற்படுத்தி தமிழ் ஈழ இனத்தை மெல்ல மெல்ல அழிப்பதுதான் இலங்கை அரசின் நோக்கமும் செயற்பாடுகளுமா? நிச்சயமாக அதுவே இலக்காக இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் ஏன் இராணுவமயம் அதிகப்படுத்தப்படுகிறது? இந்தக் கேள்விக்கான பதில் பல அதிர்ச்சியூட்டும் பக்கங்களையும் முகங்களையும் கொண்டிருக்கிறது. இராணுவமயத்தின் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் தாகத்தின் குரலை திருகிவிட முடியுமா என்பதற்கும் இப் பத்தி ஈற்றில் பதில் கூறுகிறது.
அமெரிக்க செனெட் உறுப்பினர்களின் வேண்டுகோள்
இலங்கை அரசாங்கம் அர்த்தபூர்வமான பாதுகாப்பு சீர்திருத்தத்தை முன்னெடுக்கவேண்டும், வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரை சமாதான காலத்திற்கு ஏற்ற வகையில் குறைக்கவேண்டும்.
மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகத்தன்மை மிக்க முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்று அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் வேண்டுகோள் ஒன்றை அண்மையில் விடுத்திருக்கிறார்கள்.
இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாசைகளிற்கு அமெரிக்காவின் ஆதரவை வெளியிடும் தீர்மானமொன்றை அமெரிக்க செனெட் உறுப்பினர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அமெரிக்க செனெட்டர் பென்கார்டின் அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் உறுப்பினர் ஜிம் ரிஸ்ஜ் காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜ்கிருஸ்ணமூர்த்தி பில்ஜோன்சன் ஆகியோர் இலங்கை மக்களின் அமைதியான ஜனநாயக மற்றும் பொருளாதார அபிலாசைகளிற்கு அமெரிக்காவின் ஆதரவை வெளிப்படுத்தும் இரு சபை மற்றும் இரு கட்சி தீர்மானமொன்றை அமெரிக்க செனெட் சபையில் முன்வைத்துள்ளனர்.
இதேவேளை இலங்கை அரசாங்கமும் பாதுகாப்பு படையினரும் உயிரிழந்த தங்கள் உறவுகளை அமைதியாக நினைவேந்துவதற்கு உள்ள உரிமையை மதிக்கவேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகத்தன்மை மிக்க முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்றும் அச் சபையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இராணுவத்தின் பூமியா வடக்கு கிழக்கு
பொதுவாக எந்தவொரு நாடும் தேசமும் மக்களின் பூமியாகவே கருதப்படும். ஆனால் வடக்கு கிழக்கில் மாத்திரம் இராணுவத்தினர் நாட்டுகின்ற பெயர்ப் பலகைகளில் இது இராணுவத்தின் பூமி என்று எழுதக் காட்சிப்படுத்தியிருப்பதை பல இடங்களில் காணுகிறோம்.
வடக்கு கிழக்கு தமிழ் ஈழ மக்களின் தாயகம். அங்கு பாரம்பரியமாக ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் காலம் காலமாக அவர்கள் தமது தாயகத்தை ஆண்டு வருகின்றனர்.
அந்நியர்களின் ஆதிக்கத்தினால் தமிழ் மக்கள் தமது ஆட்சி அதிகாரங்களையும் இறைமைகளையும் இழந்த நிலையில் இழந்த இறைமைகளை மீட்பதற்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ் மக்களின் தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ நிழல் அரசு ஆட்சி புரிந்த தருணத்தில் இனப்படுகொலைப் போர் தொடுக்கப்பட்டு நிலத்தை இலங்கை இராணுவம் கையகப்படுத்தியது.
புலிகளிடமிருந்து மக்களை மீட்கிறோம் என்று சொன்ன இலங்கை அரசு, தமிழ் மக்களிடமிருந்து அவர்களின் நிலத்தைக் கைப்பற்றுகிறோம் என்ற உண்மை வாக்குமூலத்தை இராணுவமயப்படுத்தலின் வாயிலாக தெளிவாகச் சொல்லி வருகின்றது.
அந்த வகையில்தான் இலங்கை அரசு தனது அரச இயந்திரமான இராணுவத்தின் மூலம் வடக்கு கிழக்கை கட்டுப்படுத்தி ஆட்சி புரிந்து வருகின்றது. இதனால் தமிழ் மக்கள் அந்நிய ஆட்சியின் கீழ் வாழ்கின்ற உணர்வையே தம் வாழ்வில் உணர்ந்து வருகின்றனர்.
தோட்டம் முதல் சலூன்வரை
கொக்காவில் பகுதியில் இருந்து மாங்குளம் நோக்கிச் செல்லுகின்ற ஏ-9 பிரதான வீதியின் அருகில் சில ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் தோட்டம் செய்வதை அந்தப் பாதையின் வழி செல்கின்ற எவரும் காண முடியும்.
இதைப்போல பல இடங்களில் இராணுவத்தினர் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து தோட்டங்களையும் பாரிய பண்ணைகளையும் நடாத்தி வருகின்றனர். இங்கே வாழ்கின்ற மக்கள் செய்ய வேண்டிய தோட்டத் தொழிலை இராணுவம் செய்கிறது.
இதனால் தமிழ் மக்களின் வாழ்வாதாரத் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதைப் போல பல்வேறு தொழில்களிலும் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. வடக்கு கிழக்கில் பல நகரங்களில் இராணுவத்தினரின் தேநீரகங்களையும் சலூன்களையும் தையல்கடைகளையும் மளிகை கடைகளையும் கூட காண நேரிடுகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உள்ள சிகை அலங்கரிப்பாளர்கள் ஒரு அதிருப்திக்கு உள்ளாகி இருந்தார்கள். கிளிநொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் மிகவும் குறைந்த செலவுக்கு இராணுவத்தினர் முடிதிருத்த அழைத்திருப்பதாகவும் இதனால் தமது வாழ்வாதாரத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இராணுவத்தினர் தாம் அரச ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு, குறைந்த செலவில் முடி திருத்தி மக்களின் மனங்களை வெல்ல முயல்கின்ற உத்தியைக் கையாள்வதாகவும் அது தமது குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
இராணுவம் ஏன் இப்படிச் செய்கிறது
இராணுவம் ஏன் இப்படியான முயற்சிகளில் ஈடுபடுகிறது? இதற்குப் பின்னால் இராணுவ மற்றும் அரசியல் நோக்கங்களே குவிந்திருக்கின்றன. கடந்த காலத்தில் இலங்கை இராணுவம் எமது நிலத்தில் வரலாறு காணாத இனப்படுகொலையைச் செய்திருக்கிறது.
அதற்கு எதிராக எமது மக்கள் தொடர்ந்து போராடி குரல் கொடுத்து வருகிறார்கள். நடந்த இனப்படுகொலைக்கான நீதி வேண்டும் என்பதை கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக ஈழ மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அத்துடன் போரில் சரணடைந்தவர்கள் மற்றும் கையளிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டுமென்றும் ஈழம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில் இராணுவத்தினர் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து தாம் இழைத்த குற்றங்களை களைய இவ்வாறான வழிமுறைகளில் ஈடுபடுகின்றனர். அதேபோல பாடசாலை போன்ற நிறுவனங்களுக்குள் பல்வேறு உதவிகள் என்ற போர்வையில் இராணுவம் நுழைய முற்படுகிறது.
இப்படியான செயற்பாடுகளின் வாயிலாக தமிழ் மக்களின் மனங்களை மாற்றி விடலாம் என்று இராணுவம் நம்புகிறது. அத்துடன் இப்படியான செயற்பாடுகளின் வழியாக இன்னமும் இராணுவமயத்தை விரிவாக்கலாம் என்றும் நோக்கம் கொள்ளப்படுகிறது.
ஆனால் இராணுவத்தினர் எவ்வளவுதான் முயன்றாலும் ஈழத் தமிழ் மக்கள் அவர்கள் இழைத்த இனப்படுகொலைக் குற்றங்களை மறப்பதாயில்லை என்பதே மீண்டும் மீண்டும் உணரப்படுகின்ற உண்மை நிலையாகும்.
உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதை தடுக்கின்ற செயற்பாடுகளில் அரசு மற்றும் இராணுவம் ஈடுபடுவது குறித்தும் அமெரிக்க செனட்சபை தனது அவதானிப்பை வெளிப்படுத்தியிருப்பதும் இங்கு முக்கியமானது.
வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவம் அதிகப்படியாக நிலைகொண்டு தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதன் வாயிலாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவேந்துவதை தடுக்கும் முயற்சிகளிலும் மாவீரர் நாள் அனுஸ்டிப்பை தடுக்கும் முயற்சிகளிலும் பெரு அரசியல் இலக்கோடு செயற்படுகிறது. ஆனால் இந்த இரண்டு முயற்சிகளிலும் இராணுவம் தோற்றே வருகிறது.
விடுதலைப் புலிகளை வென்றோம் என்று சொல்லுகிற இராணுவத்தால் உண்மையில் அது மெய்யான வெற்றியா என்பதை நிரூபிப்பதில் இத் தோல்வி பல விடைகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 15 December, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.