பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை சிறிலங்கா அதிபர் கேட்பாரா...
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுகிறார். இலங்கையில் பொருளாதார நிலை தொடர்ந்து மோசமாகி வரும் நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படாத நிலையில், இமாலயப் பிரகடனம் போன்ற சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும் சூழலில் அதிபர் ரணிலின் விஜயம் பல்வேறு கேள்விகளை எழுப்பி நிற்கிறது.
தமிழ் தரப்பின் வலிமிகு குரல்களை மிகக் கச்சிதமாக தவிர்த்தும் கண்டுகொள்ளாதும் வருகின்ற ரணில் விக்ரமசிங்க, சிறிலங்காவின் மீட்பராக தன் பணிகளை முன்னெடுக்கும் அதேவேளை, ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை ஒடுக்குவதில் ராஜபக்சக்களையும் கடந்த காலத் தலைவர்களையும் வென்றுவருகிறார்.
ரணிலின் வடக்கு விஜயம்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜனவரி 4ஆம் நாளன்று வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளுவதுடன் பல்வேறு சந்திப்புக்களையும் நடாத்த இருக்கின்றார்.
மாவட்ட செயலக மட்டத்தில் அபிவிருத்தி கலந்துரையாடல்கள் இடம்பெறுவதுடன், இளைஞர்களுடன் சமகாலத்தில் உள்ள சவால்களை முறியடிப்பது தொடர்பிலும் கருத்துக்களை கூற இருக்கிறார் என்றும் தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் பல்வேறு சந்திப்புக்கள் குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்தியலாளர்கள், ஆளுமைகள் போன்றவர்களையும் சந்திக்கவும் கருத்துரையாடல்களை மேற்கொள்ளவும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவும் அதிபர் ரணில் அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பயணிக்க வேண்டும் என்று அதிபர் ரணில் கூறுகிறார். இதன் ஊடாகத்தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறத்தில் நாட்டின் பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதேவேளை, மறுபுறத்தில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை நாம் காண வேண்டும் என்றும் இந்த இரண்டு பிரதான விடயங்களும் நிறைவேற வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் பிரதிநிதிகளுக்கு எதிரான செயல்
இவ்வாறு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் பணியாற்றவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அவர்களின் ஆதரவை ஒரு புறத்தே கேட்டுக் கொண்டு தமிழ் பிரதிநிதிகள்மீது ஒடுக்குமுறையை மேற்கொள்ளுகின்ற நடவடிக்கையும் இடம்பெற்றுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன் வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினது சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 4 ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான காலத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வடக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க கோரப்பட்டுள்ளது.
தமிழ் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக எட்டு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினர் இந்த வழக்கை தொடுத்துள்ளனர்.
வழக்கமாக உலக நாடுகளுக்கு ஒரு முகத்தையும் உள்நாட்டில் ஒரு முகத்தையும் காட்டும் அதிபர் ரணில் இம்முறை வடக்கிலேயே இருமுகங்களை வெளிப்படுத்துகிறார்.
மக்களின் குரல்களை கேட்பாரா...
கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க அவர்கள், எதிர்கட்சித் தலைவராக இருந்த சமயத்தில் சில விஜயங்களை மேற்கொண்டுள்ளார். இதன்போது போரால் பாதிக்கப்பட்ட மக்களை, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை காணுமாறு சில சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் பாதிக்கப்பட்ட மக்கள் தம் கோரிக்கைகளையும் வலிகளையும் சொல்லி இருக்கிறார்கள்.
அன்றும் எதிர்கட்சித் தலைவராக இருந்த நிலையில், அவைகளுக்கு கள்ள மௌனத்தை பதிலாக அளித்திருந்தார். ஆனால் சந்திப்புக்களை தடுக்க முயலவில்லை. ஏனெனில் அன்று தமிழ் மக்களின் வாக்குகளையும் ஆதரவையும் பெறுவதற்காக மௌனமாக இருப்பதன் ஊடாக, தமிழ் மக்களின் பிரச்சினைகளை கேட்பதைப் போல பாவனை செய்து கொண்டதே இடம்பெற்றிருந்தது.
தற்போது அதிபராக ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில், பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடாத்த தயாராகி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், நீதியையும் தீர்வையும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதுடன், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நீதியையும் வலியுறுத்தும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளமையையும் அறிய முடிகின்றது.
வடக்கு கிழக்கு மக்களை தனது பிரஜைகளாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க கருதினால் முதலில் அந்த மக்களை சந்திக்க வேண்டும். சந்தித்து அந்த மக்களின் குரல்களை கேட்க வேண்டும்.
கறிவேப்பிலையா தமிழர்கள்
அதிபர் ரணில் தமிழர்களின் தீர்வு விடயத்தில், சர்வாதிகாரமாகவும் பொறுப்பின்றியும் பேசிய பேச்சுக்களையும் நடாத்திய சந்திப்புக்களையும் கடந்த காலத்தில் பார்த்தோம். அத்துடன் தீர்வு குறித்து வாய் திறக்காத நிலையையும் பார்த்திருக்கிறோம்.
2015ஆம் ஆண்டு முதல் மைத்திரிபால சிறிசேன அதிபராக இருந்த சமயத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். இதன்போதும் தீர்வு முயற்சிகள் எதுவும் இடம்பெறாத நிலையில் சர்வதேச மட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் விவகாரம் பின்தள்ளப்பட்ட நிலையே ஏற்படுத்தப்பட்டது.
தற்போது ரணில் விக்கிரமசிங்க அதிபராக பதவி வகிக்கின்ற நிலையில், தமிழர்களின் விவகாரம் குறித்து எந்தக் கரிசனையையும் காண்பிக்காமல் இருந்தார்.
இப்போது வடக்கிற்கு வரும் சமயத்தில், வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்றும் பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க அவர்களும் இணைய வேண்டும் என்றும் கூறுகிறார்.
அப்படி தீர்த்தால்தான் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று ரணில் கூறுவது ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை மீண்டும் கறிவேப்பிலையாக பயன்படுத்துகின்ற எத்தணிப்பு என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
உண்மையிலேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அக்கறை உள்ளவராக இலங்கை அதிபர் செய்றபட்டிருந்தால், பல்வேறு முயற்சிகள் நடைமுறையில் நிகழ்ந்திருக்க வேண்டும்.
இப்போது ஆப்பிழுத்த குரங்காக சிறிலங்கா அதிபர் ரணிலின் நிலை மாறியுள்ளது. தெற்கில் அதிகாரத்தை கைப்பற்றுகின்ற போட்டி வலுத்து வருகின்றது. அத்துடன் ராஜபக்சக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம் என்று கூறுகின்றனர். ரணிலிடம் அவர்கள் ஆட்சியை இரவல் கொடுத்தது போதும் என்று நினைத்துவிட்டார்கள்.
இந்த நிலையில் வடக்கில் வந்து அதிபர் ரணில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் ஆதரவை பெற முனைகிறார். சர்வதேச ரீதியாக ஈழத் தமிழ் மக்களை பலவீனப்படுத்தி வரும் நிலையில், வடக்கு விஜயம் அச் சூழ்ச்சிகளை மறைக்கவுமா.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 04 January, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.