எர்த்சொட்' விருது வழங்கும் விழா: இந்தியா செல்லும் இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியினர்
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் மிடல்டன் ஆகியோர் வருடாந்த 'எர்த்சொட்' விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக இவ்வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புற்றுநோய் சிகிச்சைக்குப் பின்னர் இளவரசி கேட் மேற்கொள்ளும் மிகப்பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) நடைபெறவுள்ள பிரதான விருது வழங்கும் விழா உட்பட, மும்பையில் 03 நாட்கள் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
சிகிச்சைப் பின்னர் முதல் பயணம்
2024 ஆம் ஆண்டு புற்றுநோய்க்கான தடுப்பு கீமோதெரபி சிகிச்சையைப் பெற்றதன் பின்னர், இளவரசி கேட் தமது உத்தியோகபூர்வப் பணிகளைக் கணிசமாகக் குறைத்திருந்தார். அவர் தற்போது குணமடைந்து வருகின்ற போதிலும், இது அவரது சிகிச்சைக்குப் பிந்தைய மிக முக்கியமான மற்றும் பாரிய வெளிநாட்டுப் பயணமாகக் கருதப்படுகிறது.

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளைக் கண்டறியும் நோக்கோடு 2020 இல் இளவரசர் வில்லியமால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விருது, தெரிவு செய்யப்படும் 5 வெற்றியாளர்களுக்குத் தலா 10 இலட்சம் பவுண்டுகளை வழங்கி அவர்களின் சூழலியல் திட்டங்களை செயற்படுத்த உதவுகிறது.
இதுவரை நடைபெற்றதில் மிகப்பெரிய விருது விழாவாகக் கருதப்படும் இம்முறை நிகழ்வில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஆலியா பட், நடிகர் ராமி மாலெக் மற்றும் இந்தியாவில் முதன்முறையாக இசை நிகழ்ச்சி நடத்தவுள்ள பிரிட்டிஷ் பொப் குழுவான 'டேக் தட்' ஆகியோரும் அரச தம்பதியினருடன் இணைந்து கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எர்த்சொட் விருது விழாவுக்கு மேலதிகமாக, இந்திய கிரிக்கெட், பேஷன் மற்றும் சினிமா தொடர்பான பல நிகழ்வுகளிலும் அரச தம்பதியினர் கலந்து கொள்ளவுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |