வருமானத்தை விட அதிக சொத்து சேர்ப்பு : விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதியன்று மேலும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட அதிகமான சொத்துக்களைக் குவித்தது தொடர்பான இந்த வழக்கு, இன்று (03) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் முன்பாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதிபதி, இந்த வழக்கை 22ஆம் திகதியன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சிகளை வரவழைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 2010 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தனது சட்டபூர்வ வருமானத்தை விட ரூ. 75 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகப் பெற்றதன் மூலம் இலஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, இலஞ்ச ஆணைக்குழு இந்த வழக்கை அவருக்கு எதிராக தாக்கல் செய்திருந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |