மன்னார் தீவில் முன்னெடுக்கப்படும் பொருத்தமற்ற செயற்திட்டங்கள்: சுமந்திரன் சுட்டிக்காட்டு
மன்னாரில் உள்ள மக்கள் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் தீவில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (23) இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்
காற்றாலை அமைக்கப்பட்டு மின்சார உற்பத்தி
”மன்னாரில் இன்றைய தினம் (23) பொது அமைப்புக்களை ஒன்றிணைத்து விசேட சந்திப்பை மேற்கொண்டோம். மக்களின் நலன் கருதி அமைக்கப்பட்ட அமைப்புக்களை சந்தித்து மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம்.
மன்னாரில் இரண்டு பாரிய அச்சுறுத்தல்களை மக்கள் எதிர்கொள்கின்றார்கள். காற்றாலை அமைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் செயற்திட்டத்தில் மூன்று திட்டங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு திட்டத்தின் அடிப்படையில் காற்றாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றைய இரு திட்டங்களையும் உடனடியாக செயற்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதை அடிப்படையாக வைத்து காற்றாலை அமைக்கின்றதன் மூலம் இப்பிரதேசங்களில் எற்படுகின்ற பல விதமான பாதிப்புக்களை மக்கள் நேரடியாக அனுபவிக்கின்றார்கள்.
மன்னார் தீவுக்கு பாரிய பின்விளைவு
குறிப்பாக கடற்றொழிலாளர் சமூகம் வழமையாக பிடிக்கும் மீன்களின் தொகை பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மற்றும் நீரோட்டங்களின் திசைகள் வழமை போல் இல்லாது மாற்றமடைந்துள்ளது.
குறிப்பாக கரைவலை மீன்பிடி முறையில் பாரிய அளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதை வைத்தும், வேறு பல விடயங்களை வைத்தும் காற்றாலையினை மன்னார் தீவுடன் சேர்ந்து அமைப்பது மன்னார் தீவுக்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பது புலனாகின்றது.
காற்றாலை மின்சாரம் அமைக்கலாம். ஆனால் அதற்கான உகந்த இடங்களை தெரிவு செய்து முன்னெடுக்க வேண்டும். மன்னார் தீவு என்பது கடல் மட்டத்தில் இருந்து சற்று குறைவான இடத்திலே காணப்படுகின்றது. இந்த தீவு இச்செயற்திட்டத்திற்கு பொருத்தமானதாக இல்லை என்பது இங்கு வாழும் அனைவரதும் நிலைப்பாடு.
சரியான முறையில் ஆராய்ந்து இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. ஒரு திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இதனால் பல வித பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என்பது தெரியவருகிறது.
எடுக்கப்படவுள்ள நடவடிக்கை
எனவே இத்திட்டங்களை நிறுத்துவதற்கும், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்விளைவுகள் மற்றும் பாதிப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் சில மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எனவே இவ் விடயங்களை உடனடியாக கவனத்தில் எடுப்போம். இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்று நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதனடிப்படையில் மன்னாரில் இருந்து மக்கள் சார்பாகவும் இவ்வாறான ஒரு செயற்திட்டத்தை அவர்களுடன் இணைந்து முன்னெடுப்பதற்கு நாங்கள் எதிர்வரும் வாரம் நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.
மன்னாரில் உள்ள பல ஏக்கர் தனியார் காணிகளும் அபகரிக்கப்பட்டு அதனைச் சுற்றி வேலி அடைத்து பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது” என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மன்னார் பிரஜைகள் குழு, கடற்றொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனைர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |