கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த பெண் திடீரென உயிரிழப்பு!
நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் பயணத்தை ஆரம்பித்து பேருந்து மஹரகம கண் வைத்தியசாலைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்த போது மினுவாங்கொட பிரதேசத்தில் வைத்து குறித்த பெண் பேருந்தில் ஏறியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்தை சோதனையிட்ட காவல்துறையினர்
அந்த வழியாக வந்த பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் வைத்தியசாலைக்கு அருகே இறங்கியுள்ளனர். ஆனால் இந்த பெண் அங்குள்ள இருக்கையில் தூங்கி கொண்டிருந்துள்ளார்.

அதற்கமைய, பேருந்தின் நடத்துனர் பெண்ணை அணுகி அவரை எழுப்பியுள்ளார். எனினும் அவர் பதிலளிக்காததால், இது குறித்து ஓட்டுநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில், அந்தப் பெண்ணை பேருந்தில் மஹரகம காவல்துறையினரிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளனர். பின்னர், காவல்துறை உத்தியோகத்தர்கள் பேருந்தை சோதனையிட்ட போது, பெண் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
பொது மக்களின் உதவி

உயிரிழந்த பெண்ணின் பாதுகாவலர் எவரும் இல்லாததாலும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் எதுவும் அவரிடம் இல்லாததாலும், மரண விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை. அவரது அடையாளத்தை உறுதி செய்வதற்கு காவல்துறையினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.