காவல்துறைக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட பெண் கைது
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட தனது கணவரை விடுவிக்க களுத்துறை தெற்கு ஊழல் தடுப்பு பிரிவு காவல்துறை பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 03 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக வழங்க முற்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவன் போதைப்பொருளுடன் கைது
களுத்துறை தெற்கு இலஞ்ச ஒழிப்புப் பிரிவு நிலையத்தின் பொறுப்பதிகாரி உப காவல்துறை பரிசோதகர் டி.சிறி ரங்கா ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவனை கைது செய்து களுத்துறை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
சந்தேக நபர் சட்டை எடுத்து வருமாறு மனைவிக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்ததாகவும், சுமார் 20 நிமிடங்களின் பின்னர் மனைவி காவல் நிலையத்திற்கு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி
இதன்போது, இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கு 3 இலட்சம் ரூபாய் பணத்தை வழங்கி ஹெரோயின் வழக்கில் இருந்து சந்தேகநபரை விடுவிக்குமாறு குறித்த பெண் கோரியதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி, தலைமையக காவல்துறை பரிசோதகர் ருவன் விஜேசிங்கவிற்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |