நியூசிலாந்திற்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்திற்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லை - குஷானி ரோஹனதீர
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் ஒன்றியம் நியூசிலாந்திற்கு மேற்கொண்ட ஆய்வுப் பயணத்திற்கு அரசாங்கத்தின் நிதி பயன்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுப் பயணம் அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தாது கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு மேலாக நிகழ்கிறது என்று அவர் கூறினார். இந்த நிகழ்வு அபிவிருத்திப் பங்காளர்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிலங்காவிலுள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் இந்த நாட்டுப் பெண்களின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதில் பெரும் பங்காற்றி வருகின்றது.
பொதுநலவாய நாடுகள்

இந்த சேவையினை மேலும் வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்காக பொதுநலவாய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற அபிவிருத்தியடைந்த நாடுகளிற்கு விஜயம் செய்து அங்கிருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும் எனவும் ரோஹனதீர இந்த வேளையிலே கூறியிருந்தார்.
சிறிலங்கா நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் உள்ள உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி காணப்படுகிறார்கள்.
பொதுவான இலக்குகள்

இருப்பினும் அவர்கள் அனைவரும் பொதுவான இலக்குகளை நோக்கியே ஒன்றுபட்டு செயல்படுகிறார்கள்.
இந்த ஒன்றியத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே அவர்களின் தலைமையில் பொதுவான இலக்குகளை அடைவதற்கு ஒன்றிணைந்து செயற்பட்டு வருகிறார்கள் என்றும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.