கடற்றொழிலாளர்களிடம் கோரிக்கை விடுத்த இராமலிங்கம் சந்திரசேகர்!
போதைப்பொருள் மாஃபியாவுக்கு தீர்வு காணும் நடவடிக்கையின் போது கடற்றொழிலாளர்களும் பாதுகாப்பு தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டை சங்க பிரதிநிதிகளுடனான கூட்டம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் இன்று (18.10.2025) நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு கடற்வழியாகவே பெருந்தொகையான போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் மாஃபியா
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “எமது கடற்றொழிலாளர்களை சில போதைப்பொருள் மாஃபியாக்கள், போதைப்பொருள் கடத்தலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்கு முற்படுகின்றனர்.
அந்த மாஃபியாக்களின் வலைகளில் நாம் சிக்கிவிடக்கூடாது. ஆசை வார்த்தைகளை நம்பிவிடக்கூடாது. சட்டவிரோத நடவடிக்கையென்பது எப்போதும் ஆபத்தானதாகவே இருக்கும்.
எனவே, போதைப்பொருள்களை முடிவுகட்டுவதற்குரிய அரசாங்கம் மற்றும் பாதுகாப்பு தரப்பினரின் வேலைத்திட்டத்துக்கு கடற்றொழிலாளர்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
கடல்மார்க்கமாகவே அதிகளவு போதைப்பொருள் கடத்தப்படுகின்றது. எனவே, கடற்றொழிலாளர்களை அந்த கும்பல் இலகுவில் இலக்கு வைக்கலாம். இது பற்றி கடற்றொழில் அமைப்புகள் விழிப்பாக இருக்க வேண்டும்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உடந்தையாக இருந்தால் சட்டத்தன் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துமீறிய கடற்றொழில்
இதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிரு அத்துமீறல்களே இடம்பெறுகின்றன. இப்பிரச்சினை முழுமையாக தீர்ப்பதற்குரிய இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகள் இடம்பெறுகின்றன.
அதேபோல கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு என்பவற்றை வலுப்படுத்துமாறு நான் கடற்படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.” என தெரிவித்தார்.
இதன்போது வடக்கு கடற்றொழிலாளர்களுக்காக அரசாங்கத்தால் கடந்த ஒருவருட காலப்பகுதிக்குள் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் பற்றியும், எதிர்கால இலக்குகள் தொடர்பாகவும் அமைச்சர் விளக்கமளித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






