இலங்கைக்கு கிடைக்கப் போகும் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள்
இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது நிதித்துறைக்கு ஆதரவளிக்க வலுவான பாதுகாப்பு வலைகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக இலங்கை, நேபாளம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச். ஹடாட்-ஜெர்வோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வணிகங்கள், தனிநபர்கள், சிறு வணிகங்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு நிலையான மற்றும் நம்பகமான வங்கித் துறை இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காப்பீட்டுத் திட்டம்
வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தை வலுப்படுத்துவதுதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் மக்கள் உள்ளிட்ட சிறு வைப்புத்ததாரர்களின் சேமிப்பைப் பாதுகாக்க முடியுமென அவர் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை இலங்கையின் நிதி அமைப்பில் நம்பிக்கையை நிலைநிறுத்தி நாட்டை மீண்டும் சிறப்பாகக் கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்குமென என ஃபரிஸ் எச். ஹடாட்-ஜெர்வோஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதித்துறை பாதுகாப்பு நிகர திட்டம் எனும் திட்டம், இலங்கை மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்பு காப்புறுதி திட்டத்தின் நிதி மற்றும் நிறுவன திறன்களை உயர்த்த வடிவமைக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.
