தெற்காசியாவின் வளர்ச்சிக்கு இந்தியாவே முக்கிய காரணம்: உலக வங்கி சுட்டிக்காட்டு
உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியமாக தெற்காசியா விளங்குவதாகவும் இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குப் பிரதான காரணம் என்றும் உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையில் இருப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசியப்பிராந்திய அபிவிருத்தி நிலவரம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி நிலவரம் தொடர்பான மதிப்பீடு நேற்று(02) வன் கோல்பேஸ் டவரில் அமைந்துள்ள உலக வங்கியின் இலங்கைக்கிளை அலுவலகத்தில் வெளியிடப்பட்டது.
தெற்காசியப்பிராந்தியம்
அதனை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் ஒருங்கிணைப்பில் உலக வங்கியினால் நேற்றைய தினம்(02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெற்காசியப்பிராந்தியத்தின் அபிவிருத்தி நிலவரம் குறித்து விளக்கமளிக்கையிலேயே உலக வங்கியின் தெற்காசியப்பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொருளியலாளர் பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2024 - 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் மிகத்துரிதமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியமாக தெற்காசியப்பிராந்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்தியாவின் வேகமான வளர்ச்சியே அதற்குரிய பிரதான காரணமென சுட்டிக்காட்டிய அவர், கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரான காலகட்டத்தில் இப்பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் வளர்ச்சி மந்தகரமான நிலையிலேயே இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
அத்தோடு அதற்கமைய 2024 இல் தெற்காசியப்பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி ஆறு சதவீதமாக அமைந்திருப்பதாகவும் அதேவேளை உலகின் ஏனைய பிராந்தியங்களுடன் ஒப்பிடுகையில் தெற்காசியப்பிராந்தியத்தின் வளர்ச்சியானது பெருமளவுக்கு அரசதுறையிலேயே தங்கியிருக்கின்றது என்று பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் சுட்டிகாட்டியுள்ளார்.
எனவே அத்துறைக்கான செலவினங்கள் அதிகரித்திருப்பதாகவும் இருப்பினும் தனியார் முதலீடுகளின் வளர்ச்சி குன்றியிருப்பதுடன் இது புதிய வர்த்தக மற்றும் நிதியிடல் வாய்ப்புக்கள் அத்தோடு தரமான கட்டமைப்புக்கள் ஆகியவற்றின் தேவையை உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியப்பிராந்தியம் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய சவால்களால் பல்வேறு தாக்கங்களுக்கு முகங்கொடுத்து வருகின்ற நிலையில் இச்சவால்களால் குறிப்பாக வறியவர்கள் வெகுவாகப் பாதிப்படைவதுடன் அதற்கு இசைவாக்கமடைவதில் குடும்பங்களும் மற்றும் விவசாயிகளும் இன்னல்களை எதிர்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்புக்கள்
எனவே இதனை உரியவாறு கையாள்வதற்கான உத்திகளில் பிரதானமானது வீதிகள் மற்றும் பாலம் போன்ற பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய கட்டமைப்புக்களில் முதலீடு செய்வதாகுமென உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் தெற்காசியப்பிராந்தியத்தில் தொழில்புரியும் வயதுடையோரின் சனத்தொகை தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்ற போதிலும் அதனை ஈடுசெய்யக்கூடியவகையில் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படவில்லையென அவர் கரிசணை வெளியிட்டுள்ளார்.
வலுவான வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் நிதியியல் சந்தைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் என்பன நீண்டகால அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி, தனியார்துறை முதலீடுகள் மற்றும் அரச வருமானம் என்பன அதிகரிப்பதற்கும் அத்தோடு குடும்பங்கள் காலநிலைமாற்ற சவால்களை சீராகக் கையாள்வதற்கும் உதவும் என பிரான்ஸிஸ்கா ஒன்ஸோர்ஜ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |