நாட்டு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்ட மான்டஸ் சூறாவளி காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் நிலவும் குளிரான வானிலை தொடர்ந்தும் நீடிக்குமென இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் மழை பெய்யுமெனவும், 100 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகலாமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள மான்டஸ் சூறாவளி இன்று இரவு மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடலை கடந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கையின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தோட்டச் செய்கை பாதிப்பு
சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலையின் காரணமாக யாழ்ப்பாணத்தில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 38 குடும்பங்களைச் சேர்ந்த 142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்வேலி, கந்தன், நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளில் அதிகளவு வாழை மரங்கள் குலையுடன் முறிந்து விழுந்துள்ளதாக வாழைத்தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். கிளிநொச்சி நகரப் பகுதி மற்றும் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருவையாறு, கணேசபுரம் பாரதி புரம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு, தருமபுரம், பெரியகுளம், கல்மடுநகர், ஊரியான், கோரக்கன் கட்டுபோன்ற கிராமங்களில் வாழும் மக்கள் மலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின், வாழ்விடங்களில் வெள்ள நீர் சூழப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், கால்நடைகள் இறந்துள்ளதுடன், சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. தற்காலிக வீடுகளின் கூரைகள் காற்றினால் தூக்கி வீசப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மக்கள் பலர் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்