உலக தரவரிசை : வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை பல்கலைக்கழகங்கள்
ஆசியப் பிராந்தியத்தில் உயர்கல்வித் துறையில் போட்டித்தன்மை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் பல முன்னணி பல்கலைக்கழகங்கள் தமது பிராந்திய தரவரிசைகளைப் பேணுவதில் சவால்களை எதிர்கொண்டுள்ளன.
QS Quacquarelli Symonds நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய 2027 ஆசிய பல்கலைக்கழக தரவரிசைகளின்படி, இலங்கையின் பல முக்கிய பல்கலைக்கழகங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
எட்டு பல்கலைக்கழகங்கள் பின்னடைவு
இந்தக் குறியீட்டின்படி, கொழும்பு பல்கலைக்கழகம் 46 இடங்கள் சரிந்து 364வது இடத்தைப் பிடித்துள்ளது. பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்கள் முறையே 389 மற்றும் 398வது இடங்களுக்குப் பின்தங்கியுள்ளன. ஒட்டுமொத்தமாக, இந்த ஆண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட 12 இலங்கை பல்கலைக்கழகங்களில் 8 பல்கலைக்கழகங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளன, மேலும் இரண்டு பல்கலைக்கழகங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையாக உள்ளன.

இருப்பினும், இந்த பின்னடைவு பல்கலைக்கழகங்களின் உள் சரிவை விட, பிராந்திய வளர்ச்சியுடன் தொடர்புடையது. QS நிறுவனம் சுட்டிக்காட்டுவது போல, நாட்டின் பல்கலைக்கழகங்களின் தரவரிசை சரிவுக்கு முக்கிய காரணம், இந்த ஆண்டு தரவரிசையில் கிட்டத்தட்ட 200 புதிய பல்கலைக்கழகங்கள் ஆசியப் பிராந்தியத்திலிருந்து புதிதாகச் சேர்க்கப்பட்டதே ஆகும்.
இந்தக் கடுமையான போட்டிச் சூழலுக்கு மத்தியிலும், நாட்டின் இரண்டு பல்கலைக்கழகங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
மொரட்டுவ பல்கலைக்கழகம் 37 இடங்கள் முன்னேறி 517வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், களனி பல்கலைக்கழகம் 44 இடங்கள் முன்னேறி 687வது இடத்தைப் பிடித்துள்ளது.
தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில் கொழும்பு பல்கலை
ஒரு பல்கலைக்கழகத்தின் தரத்தை அளவிடுவதில் 20% அதிக மதிப்பைப் பெறும் 'வேலை வழங்குநர் நற்பெயர்' (Employer Reputation) குறியீடு குறைவடைந்தமை, கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களின் பின்னடைவுக்கு நேரடியாகப் பாதித்துள்ளது.

இருப்பினும், இந்த சவாலுக்கு மத்தியிலும், தொடர்ந்து ஐந்தாவது முறையாக நாட்டின் மிக உயர்ந்த தரவரிசையைப் பெற்ற பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தனது முன்னிலையைப் பாதுகாத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, 192வது இடத்தைப் பிடித்து, ஆசியப் பிராந்திய வேலை வழங்குநர் நற்பெயரில் சிறந்த 200 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்த ஒரே இலங்கை பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் திகழ்கிறது.
புதிய பல்கலைக்கழகங்களின் வருகை மற்றும் வேலை வழங்குநர் நற்பெயர் தவிர, முனைவர் பட்டம் பெற்ற விரிவுரையாளர்களின் விகிதம் மற்றும் மாணவர்-விரிவுரையாளர் விகிதங்களில் ஏற்பட்ட மாற்றங்களும் இந்த ஆண்டு முடிவுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை இந்தத் தரவுகள் மேலும் உறுதிப்படுத்துகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |