உலக சுற்றுலா தினம் கொண்டாடுவது ஏன்..! முக்கியத்துவம் இவை தான்..
அனைத்து மக்களும் இன மத பேதமின்றி உலகின் பல்வேறு புதுப்புது விடயங்களை கண்டு ரசிப்பதற்காக சுற்றுலாக்களை மேற்கொள்வது வழக்கம்.
அந்தவகையில் சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் செப்டம்பர் 27ம் நாள் உலக சுற்றுலா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சுற்றுலாவை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது என்று சொல்ல முடியும். ஏனெனில் உலகில் ஏதாவது ஒரு இடத்துக்கு யாராவது ஒருவர் சென்று வந்துகொண்டுத்தான் இருக்கின்றனர்.
குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமானது. இது உலகின் பல்வேறு முக்கியமான இடங்களை, கலாசார ரீதியாக தெரிந்து கொள்ள உதவுகிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சுற்றுலா மூலம் பொருளாதாரம் விரிவடையும், உலக நாடுகளுக்குள் நல்லுறவு, மேம்படும் சமாதானம், கலாச்சாரம் என இதன் பட்டியல் நீளும்.
முதன்முதலில் 1980ம் ஆண்டு செப்டம்பர் 27 ம் திகதி சுற்றுலா தினமாக ஐ.நா சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
உலகளாவிய சுற்றுலாத் துறையின் முக்கியத்துவம் மற்றும் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான பங்களிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
போக்குவரத்துத்துறை, உணவுத்துறை, இடவசதி, ஓய்வு மற்றும் கேளிக்கை என பல துறை சார்ந்தவர்கள் சுற்றுலா மூலம் பயன்பெறுகின்றனர். பூமியில் உள்ள பத்து பேரில் ஒருவர் சுற்றுலாத் துறையில் பணிபுரிகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது.
உலகின் மிகப்பெரிய தொழிலாக சுற்றுலா பார்க்கப்படுகிறது. பொருளாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு சுற்றுலா துறைக்கு வளரும் நாடுகள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன.

