யார் அந்த புதிய பாப்பரசர்..! உலகமே உற்றுநோக்கும் புகைபோக்கி நிறுவப்பட்டது
வத்திக்கானில்(vatican) உள்ள சிஸ்டைன் தேவாலயத்தின் கூரையில் உலகின் மிகவும் பிரபலமான புகைபோக்கியை நிறுவும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்குப் பிறகு காலியாக இருந்த அடுத்த திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரபூர்வ செயல்முறை அல்லது மாநாடு மே 7 ஆம் திகதி நடைபெறும்.
புகை போக்கியின் மீது திரும்பியுள்ளஅனைத்து கண்களும்
புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டாரா என்பதை அறிவிக்கும் புகையைக் காண அனைத்து கண்களும் இந்தப் புகைபோக்கியின் மீது திரும்பியுள்ளன.
மே 7 ஆம் திகதி பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரபூர்வ செயல்முறை தொடங்கத் தயாராகி வரும் நிலையில், பிரதிஷ்டைக்கு ஊழியர்கள் தயாராகும் வரை சிஸ்டைன் தேவாலயம் தற்போது மூடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 135 கார்டினல்கள் பாப்பரசரை தேர்வு செய்யும் தேர்தலுக்கு தகுதி பெற்றுள்ளனர், அதில் 53 கார்டினல்கள் ஐரோப்பாவிலிருந்தும், 23 ஆசியாவிலிருந்தும், 20 கார்டினல்கள் வட அமெரிக்காவிலிருந்தும், 18 பேர் ஆபிரிக்காவிலிருந்தும், 17 பேர் தென் அமெரிக்காவிலிருந்தும், நான்கு பேர் ஓசியானியாவிலிருந்தும் வந்துள்ளனர்.
பூமியில் மிகவும் ரகசியமான வாக்கெடுப்பு
வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் ரகசியமான வாக்கெடுப்பாகக் கருதப்படுகிறது.
மேலும், பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, கார்டினல்களின் வாக்குச் சீட்டுகள் எரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன, வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும் புகையிலிருந்து வெளி உலகம் ஒரு பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிய முடியும்.
அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளிவந்தால், அது கார்டினல்களின் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதைக் குறிக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
