நாங்கள் நிரபராதிகள்! நீதிமன்ற விசாரணையில் யோஷித - கரன்னகொட அறிவிப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) தங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு, யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி, வசந்த கரன்னகொட ஆகியோர் இன்று (23) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாங்கள் குற்றமற்றவர்கள் என வாதிட்டுள்ளனர்.
இவ்வழக்கு, இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது, இலஞ்ச ஆணைக்குழுவால் பிரதிவாதிகளுக்கு எதிராகக் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டன.
நிதி இழப்பு
அதனைத் தொடர்ந்து, இவ்விவகாரங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்தல் தொடங்கியது. இருப்பினும், மேற்கொண்டு நடத்தப்படும் நடவடிக்கைகள் டிசம்பர் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.

யோஷித ராஜபக்சவை பிரித்தானியாவில் உள்ள ரோயல் கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி நெறியில் பங்கேற்கச் செய்வதற்கு முறையற்ற வகையில் ஏற்பாடுகளைச் செய்ததன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக வசந்த கரன்னாகொட மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் முறையற்ற அனுகூலத்தைப் பெற்றதாக யோஷித ராஜபக்ச மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் எதிராக மொத்தம் எட்டு குற்றச்சாட்டுகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |