4000 அனாதை சடலங்களை தனியாளாக அடக்கம் செய்த இளம் பெண் : சந்திக்கும் பாரிய சவால்
இந்திய தலைநகர் டெல்லியில் மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாத 4000 சடலங்களை தனியாளாக நின்று அடக்கம் செய்துள்ளார் 26 வயதேயான இளம் பெண் ஒருவர்.
இவ்வாறு இவர் சடலங்களை அடக்கம் செய்வதால் நண்பர்கள் மற்றும் திருமணம் என பாரிய சவால்களுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லி ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்த பூஜா ஷர்மா என்ற பெண்ணே இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்பவராவார்.
சடலங்களை அடக்கம் செய்ய
இவ்வாறு சடலங்களை அடக்கம் செய்ய குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை செலவாகும் என தெரிவிக்கும் அவர்,அதற்காக தன் தாத்தாவின் ஓய்வூதியத்தில் வரும் பணத்தை எடுத்துச் செலவு செய்வதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பூஜா ஷர்மா தெரிவிக்கையில், “30 வயதான எனது மூத்த சகோதரர், கடந்த 2022-ஆம் ஆண்டு, சிறு மோதல் ஒன்றின்போது என் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தியைக் கேட்ட என் அப்பா, கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அப்போது, நான்தான் என்னுடைய சகோதரனுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்தேன்.அன்று ஆரம்பித்த இந்தச் சேவைப் பயணம், இன்றுவரை தொடர்கிறது.
முகவரி தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை பெற
ஆரம்பத்தில் முகவரி தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை பெற காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்புகொண்டேன். இப்போது அவர்களே, இதுபோன்ற உடல்கள் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர்.
சந்திக்கும் பாரிய சவால்
தற்போது, எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். மனம்விரும்பி இத்தகைய சேவையை நான் செய்து வந்தாலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தச் சேவையை பலரும் ஒரு தடையாகவே பார்க்கிறார்கள். இதனால், என்னை சந்திக்கவிடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுப்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அத்துடன், இந்தப் பணிகளை செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |