வவுனியாவில் குளத்திலிருந்து மீட்கப்பட்ட இளைஞன் : சடலத்தை வழங்குவதில் இழுபறி
புதிய இணைப்பு
சட்ட வைத்திய அதிகாரி வராமையால் வவுனியாவில் குளத்தின் அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக்கறை காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வவுனியா, பாவற்குளத்தின், சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து நேற்று (16.04.2025) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் இரத்தக் கறை காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த புதுவருட தினமன்று காணாமல் போயிருந்த வவுனியா விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.
குறித்த சடலத்தை நேற்று (16) மாலை பார்வையிட்ட பதில் நீதவான் அன்ரன் புனிதநாயகம் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பான துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
வவுனியா வைத்தியசாலையின் பிணவறை குளிரூட்டிகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், குறித்த சடலம் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், வவுனியா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி வராமையால சடலம் உடற் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படாது, செட்டிகுளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளதாக இறந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
வவுனியாவில் (Vavuniya) இரத்தக்கறைகளுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் பாவற்குளத்தின் அலைகரைப்பகுதியில் இன்று (16.04.2025) மீட்கப்பட்டதாக உலுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
உலுக்குளம் காவல்துறையினருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கமைய சடலம் இன்று (16) மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் கடந்த 14ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ளமையினால் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
