தீக்காயங்களுக்கு உள்ளான ஒரு பிள்ளையின் தாயார் மருத்துவமனையில் அனுமதி - கணவன் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை கணவன் தீ மூட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மல்வாவி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கணவனால், தீ மூட்டப்பட்ட மனைவி, தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயாரான குறித்த பெண் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை தீக்காயங்களுக்குள்ளான பெண் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவரின் கணவன் மல்லாவி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினரால் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.