யாழில் இளம் யுவதி மர்மமான முறையில் மரணம் : தாய்மாமன் கைது!
யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய நிலையில், நோயாளர் காவு வண்டியில் அங்கு வந்தவர்கள் யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளாதாக தெரிவித்து திரும்பி சென்றனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம்
பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ஆரம்பகட்ட மரண விசாரணைகளின்போது குறித்த யுவதிக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

யுவதியின் சடலம் மீது உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவரின் உடல் முழுவதும் கடுமையான தாக்குதல் நடாத்தப்பட்டு, கண்டல் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணைகளின்போது அதிர்ச்சி மிக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.
பச்சை பனை மட்டையால் யுவதி மீது தாக்குதல்
குறித்த யுவதி தாய் - தந்தை இல்லாத நிலையில் சகோதரியுடனேயே வசித்து வந்துள்ளார். கடந்த 08ஆம் திகதி இவர் சகோதரிக்கு சொல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டு பின்னர் வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் யுவதியின் தாயின் தம்பி பச்சை பனை மட்டையால் யுவதியை கடுமையாக தாக்கிய விடயம் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் குறித்த யுவதிக்கு 09ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் அவ்விடத்திற்கு வந்த நோயாளர் காவு வண்டி, குறித்த யுவதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து திரும்பிச் சென்றது.
தாய்மாமன் கைது
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர் யுவதியின் தாய் மாமனான, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகாதார பணியாளராக கடமை புரியும் நபரை கைது செய்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |