இணையவழி பணமோசடி குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது
தனியார் வங்கி ஒன்றின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே போலி இணையதளத்தை உருவாக்கி, பண மோசடி செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு நேற்று (20.04.2026) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வாரியப்பொல காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கம்பஹா - மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பண மோசடி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி விசாரணையில் போலி இணையதளத்தை உருவாக்கி, பத்து இலட்சத்து இருபத்தி நான்கு (1,000,024) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (21.04.2026) குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |