யாழ் போதனாவில் நெகிழ்ச்சி : இறந்த பின்னும் உயிர்களை வாழ வைத்த இளைஞன்!
வவுனியாவில் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் தனது இரண்டு சிறுநீரகங்களை தானம் செய்ததன் மூலம் இருவரின் உயிரைக் காப்பாற்றி தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞனின் பூதவுடலுக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாம் தமது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், ”வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜ் ராஜ்கிரன் என்ற 27 வயதான இளைஞன் திடீரென ஏற்பட்ட விபத்தில் சிக்கிக் கொண்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 8ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டார்.

யாழ்ப்பாணத்தில் சிடி ஸ்கான் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தலையில் ஏற்பட்ட காயம் கடுமையான வீக்கம் மற்றும் உள் இரத்தக் கசிவுகளை ஏற்படுத்தியிருந்தது என்பதும் நரம்பு சத்திரசிகிச்சை மருத்துவர்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு, உயிரை காக்க தேவையான அனைத்து சிகிச்சைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன.
இறுதி வணக்கம் செலுத்தப்பட்டது
ஆனால், தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல், அவரது மூளைச் செயற்பாடுகள் படிப்படியாக குறைந்து, இறுதியில் மூளை இறப்பு உறுதிசெய்யப்பட்டது.

இந்த செய்தி அவரது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்களின் குடும்பத்தினர் அவரது இரண்டு சிறுநீரகங்களையும் தானம் செய்ய முன் வந்தனர்.
இந்தநிலையில், மரணமடைந்த இளைஞனின் இரண்டு சிறுநீரகங்களையும் மருத்துவக் குழு நேற்று (12) வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் அகற்றி, அவை இரண்டு நோயாளிகளுக்கு மாற்று சிறுநீரகமாக வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு சத்திர சிகிச்சை கூடத்தில் வைத்தியர் குழாமால் இறுதி வணக்கம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |