திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா! கொடுக்கப்பட்ட பதிலடி
திருகோணமலையை வைத்து விடுதலைப் புலிகளிடம் சீனா பேரம் பேசியது எனவும் அதனை விடுதலைப் புலிகள் மறுத்தனர் எனவும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யாநாதன்.
எமது ஊடகத்தின் மெய்ப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ 1987இல் மேற்கொள்ளப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய முக்கிய விடயமாக, இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் இலங்கை தன் மண்ணைத் தரக்கூடாது என்ற முக்கிய சாராம்சம் பதிவிடப்பட்டிருந்தது.
அப்படியான சூழலே அன்றைய காலகட்டத்தில் நிலவியது. ஆனால் தற்போது அந்த நிலை இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. அந்த நிலை முற்றிலுமாக மாறிவிட்டது.
செயற்கைக்கோள்களின் துல்லியமான தகவல் வழங்கல்
இறுதி யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியை எடுத்துக்கொண்டால் உலக நாடுகளினுடைய செயற்கை கோள்கள் எல்லாம் விடுதலைப் புலிகளினுடைய போர் தளபாடங்களை காட்டிக்கொடுத்து அழிவிற்கு முக்கியமான காரணமாக இருந்தது.
அதனை வைத்து ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டது. அத்தோடு ஆயுதக் கிடங்குகளும் இவ்வாறான செயற்கைக்கோள்களின் துல்லியமான தகவல் வழங்குதல் மூலமாக தாக்கி அழிக்கப்பட்டன.
விடுதலைப் புலிகளுடைய பின்னடைவுக்கு முக்கியமாக இந்த கப்பல்களின் மூழ்கடிப்பே காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்த காலம் வரைக்கும் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
அதற்கு காரணம், விடுதலை புலிகள் இந்தியாவுக்கு எதிரான எந்த ஒரு நடவடிக்கைக்கும் எந்த நாடு முன் வந்தாலும் அதனை அனுமதிக்கவில்லை.
விடுதலைப் புலிகளிடம் பேரம் பேசிய சீனா
திருகோணமலையை வைத்து விடுதலை புலிகளுடன் சீனா பேரம் பேசல்களை மேற்கொண்டிருந்தது. ஆனால், விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்த வரைக்கும் அவர் ஒரு விடயத்தில் தெளிவாகவே இருந்தார்.
அது என்னவென்றால், இந்தியாவுடன் தமக்கு இருக்கக்கூடிய ஒரு புரிதல் பல்வேறு காரணங்களால் தட்டிக் கழிக்கப்படுகின்றது எனும் அரசியல் பின்னணியை உணர்ந்தவராக இருந்தார்.
ஆனாலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் மீது விசாரணை முடிவடையாத நிலையிலேயே குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதன் உண்மை தன்மை இதுவரை வெளிப்படவில்லை.
2009 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் தன்னை கட்டமைத்துக்கொள்ளக்கூடிய பலம் இலங்கைக்கு இல்லாத நிலையில் அது சீனாவை சார்ந்தது. சீனா மட்டுமல்ல பல நாடுகளை சார்ந்தது. சீனாவுடன் ஆதரவு அல்லது சார்புத் தன்மை இருந்தால் ஏனைய நாடுகள் இலங்கைக்கு உதவ முன் வராது.
இவ்வாறு பல நாடுகளின் உதவியுடன் தமிழினத்தினுடைய விடுதலைப் போராட்டத்தை அழித்த பிறகு தான் இலங்கை அடிமைத்தனத்துக்குள் உட்பட்டது” என்றார்.
தொடர்புடைய செய்தி
விடுதலைப் புலிகளின் தலைவரை உணர்ந்த சிங்கள தரப்பு