விடுதலைப் புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ரணிலால் ஏன் போராட்டக்கள இளைஞர்களிடம் பேசமுடியவில்லை..!
விடுதலைப் புலிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய ரணில்
விடுதலைப் புலிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய ரணிலால் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யும் இளைஞர்களிடம் பேசமுடியவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ அன்று 2001 ஆம் ஆண்டு இந்த நாட்டில் அதிபராக இருந்த சந்திரிக்கா பண்டாநாயக்க தலைமையின் கீழ் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்று அரசாங்கத்தை உருவாக்கியதன் பின்னர் இந்த நாட்டில் போராடிய விடுதலைப் புலிகளுடன் அவர்கள் சமாதான ஒப்பந்தம் செய்தனர்.
சமாதான ஒப்பந்தம் மட்டுமல்ல, அவசரகால சட்டத்தையும் அவர்கள் எடுத்தனர்.
ஏன் போராட்டகள இளைஞர்களிடம் பேசமுடியவில்லை
அப்படியென்றால் அன்று அவர்களால் விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியும் என்றால், அவர்களை விட மிக மோசமாக இருக்கின்றனரா? இன்று நாட்டில் இருக்கக்கூடிய இந்த இளைஞர்களுடைய ஜனநாய போராட்டம் என நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றோம்.
முன்னாள் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாட்டில் ஏற்பட்ட பல பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிராக நாட்டில் இருந்த இளைஞர்கள் மக்கள் அனைவரினது போராட்டம் காரணமாக தான் அவர்கள் இருவரும் பதவி விலக வேண்டிய நிலை நாட்டில் உருவானது.
எனவே அதன் பின்னர் தான் நாடாளுமன்றில் இருக்கக்கூடிய உறுப்பினர்களால் ரணில் விக்ரமசிங்க அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எனவே இன்று இந்த நாட்டில் நடக்கக்கூடிய இந்த அநியாயங்களுக்கு எதிராக, அவசரகால சட்டத்திற்கு எதிராக இந்த நாட்டில் இருக்கக்கூடிய இயக்கங்கள் பல கட்சிகள் பல தொழிற்சங்கள் செய்யக்கூடிய இந்த போராட்டத்திற்கு நாங்களும் ஆதரவு வழங்குகின்றோம்” எனத் தெரிவித்தார்.