விடுதலைப் புலிகளின் தலைவரை உணர்ந்த சிங்கள தரப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனது போராட்டம் சரியானது என்பதை சிங்கள மக்கள் இன்று உணர்ந்திருக்கின்றார்கள் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்துள்ளார்.
அச்சங்கத்தின் கல்முனை தலைமையகத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,
பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடினார்?
“கடந்த 74 வருடங்களுக்கு முன்னர் விட்ட தவறுகளை புதிய அரசாங்கம் விடக் கூடாது. ஏனெனில் இந்த 74 வருடங்களாக அரசாங்கம் விட்ட தவறுகளினால் தான் பிரபாகரன் போன்றவர்கள் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
பிரபாகரன் ஏன் ஆயுதம் ஏந்திப் போராடினார் என்பதை சகலரும் உணர வேண்டும். தமிழ் பேசும் எங்களுக்கு பல அநியாயங்கள் நடந்திருக்கின்றது. எங்களை நாங்கள் ஆளக்கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. இவ்வாறாக ஜனநாயக முறை மீறப்பட்டமையினால் தான் பிரபாகரன் போன்றோர் உருவாகினார்கள்.
அவரது போராட்டம் நியாயமான போராட்டமாகவும் மக்கள் போராட்டமாகவும் இருந்ததை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். வட கிழக்கினை ஆளக்கூடிய நிர்வாகக் கட்டமைப்பினை கேட்டுத் தான் அவர் போராடினார். அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் கேட்கவில்லை. மக்களுக்காகவே அவர் போராடினார்.
வடகிழக்கு மக்களை ஆளக்கூடிய நிர்வாகத்தை தாருங்கள் என பிரபாகரன் கேட்டார். அதில் என்ன தவறு உள்ளது.
சேனநாயக்க முதல் கோட்டாபய வரையிலான ஆட்சியாளர்கள் விட்ட தவறினால் தான் சிறுபான்மை மக்கள் சின்னாபின்னமாகி உள்ளனர். புதிய அரசாங்கமானது 74 வருடங்களாக விட்டிருந்த தவறுகளை விட வேண்டாம்.
இன்று கூட சிங்கள மக்கள் இதனால் தான் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் மக்களின் கடந்த கால போராட்டம் நியாயமானது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.
சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம்
அன்று பிரபாகரன் அவர்களின் போராட்டம் பிழையானது எனக் கூறிய சிங்கள மக்கள் இன்று அது சரியானது என்பதை உணர்ந்திருக்கின்றார்கள்.
கடந்த 74 வருடங்களாக மாறி மாறி ஆட்சி செய்தவர்கள் மக்களை ஏமாற்றினார்களே அன்றி மக்களின் நலனுக்காக செயற்படவில்லை என்பதை மக்கள் அறிவார்கள்.
அரசியல்வாதிகள் விடுகின்ற தொடர்ச்சியான தவறுகளை மக்களினால் ஜீரணிக்க முடியாதுள்ளது. இன்று டீசல் மண்ணெண்ணய், எரிவாயு உள்ளிட்ட பலவற்றை பெறுவதற்கு சிரமப்படுகின்றனர்.
மக்கள் வாழ்க்கை சுமையினை தாங்க முடியாதவர்களாக இருக்கின்றார்கள். மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் ஊடகவியலாளர்களை அடக்கி ஆளப் பார்க்கின்றார்கள். இவையெல்லாம் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளாகும்.
எனவே தான் கடந்த கால தவறுகளை மறந்து தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் இனியாவது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்” என்றார்.