உக்ரைனுக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு கவசம்: ஸெலென்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் இதற்கான இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையே சுமார் ஒரு மணி நேரம் நீடித்த தீவிரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் ஏற்படும் பட்சத்தில் உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இது இன்னும் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தாகவில்லை என்றாலும் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் உலகத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதில் ஐரோப்பிய நாடுகள் காட்டும் மெத்தனப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐரோப்பா வெறும் பேச்சளவில் நிற்காமல் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் போருக்கான தீர்வு மிக விரைவில் வரும் என்று ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென தான் உருவாக்கியுள்ள அமைதி வாரியம் (Board of Peace) என்ற அமைப்பை அவர் முறைப்படி ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |