உக்ரைன் போரின் முடிவு! புடினுக்கு நேரடியாக ஜெலென்ஸ்கி எழுதிய கடிதம்
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இரு நாட்டுத் தலைவர்களும் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் மூலம் முன்மொழிந்துள்ளார்.
இந்த அழைப்பை ரஷ்யா நிராகரித்தால், உக்ரைன் தொடர்ந்து போரிடத் தயாராக இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில், உக்ரைனின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்கள், கடுமையான பணவீக்கம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றால் பெரும்பாலான ரஷ்ய மக்கள் சோர்வடைந்துவிட்டதாகவும், அவர்கள் அமைதியை விரும்புவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான போர்நிறுத்தம்
தற்போது அமெரிக்காவின் கவனம் ஈரானில் நிலவும் மோதல்களின் பக்கம் திரும்பியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஐரோப்பாவில் நடக்கும் போர் மீண்டும் அமெரிக்காவின் கவனத்திற்கு வரும் வரை நாம் வெறுமனே காத்திருப்பது தவறானது" என்றும் தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நகர்வுகள் போர்க்களத்தின் எல்லையிலிருந்தே தொடங்க வேண்டும் எனக் கூறியுள்ள ஜெலென்ஸ்கி, பேச்சுவார்த்தைகள் நடைபெறும் காலம் முழுவதும் முழுமையான போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதே உக்ரைனின் நிலைப்பாடு என்றும், இதுவே சர்வதேச அளவில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறை என்றும் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பிற்கான ஒரு குறிப்பிட்ட திகதியை நிர்ணயிக்குமாறு கோரியுள்ள அவர், போர் மற்றும் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பாரம்பரியமாக நடுநிலை வகிக்கும் சுவிட்சர்லாந்து, துருக்கி அல்லது அரபு நாடுகளில் ஏதேனும் ஒன்றை இதற்கான களமாகப் பயன்படுத்தலாம் எனப் பரிந்துரைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 12 மணி நேரம் முன்